மாலத்தீவில் கிடைத்த வெற்றி மாலை
பழங்கால அரச குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பரம்பரையாகப் பயன்படுத்தும் குலச்சின்னங்கள் இருந்தன. இவற்றில் முக்கியமானது மணிமகுடம். ஒரு நாட்டின் மன்னராகத் தேர்வு செய்யப்பட்டவர், அரியணை ஏறும்போது, தங்கள் பரம்பரை குலச் சின்னமான மணிமகுடத்தைத் தலையில் சூட்டியபடி பதவி ஏற்பது வழக்கம். இந்த மணிமகுடம், வழி வழியாகப் பயன்படுத்தப்படும் அரச குலத்தின் பரம்பரைச் சொத்து என்பதால், அதற்குத் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
வலுவான படைகளைக் கொண்ட மன்னர், அந்த மணி மகுடத்தைத் தனது அரண்மனையிலேயே பாதுகாப்பாக வைத்து இருப்பார். அவரது ஆட்சி முடிந்து, அல்லது அவரது மரணத்துக்குப் பின் அரியணை ஏற இருப்பவர், அதே மணிமகுடத்தைத் தலையில் சூட்டி புதிய மன்னராகப் பதவி ஏற்றுக் கொள்வார். அடிக்கடி போரைச் சந்திக்கும் சில மன்னர்கள், தங்களது குலச் சின்னமான மணிமகுடத்தை எதிரிகளிடம் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதற்காக, தங்களது நட்பு நாடு ஒன்றில் அந்த மணி மகுடத்தைப் பாதுகாப்பாக மறைத்து வைப்பது உண்டு.
மதுரை மன்னராக இருந்த மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன், சோழ மன்னர் பராந்தகனிடம் தோற்று ஓடியபோது, தங்களது குலச்சின்னங்களை இலங்கை மன்னரிடம் அடைக்கலமாகக் கொடுத்தார் என்பதையும், அதனை 80 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னர் ராஜேந்திரன் மீட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
அதேபோல, சோழர்களின் படையெடுப்புகளுக்கு அஞ்சிய சேர மன்னர்கள், தங்கள் மணிமகுடம் உள்பட குலச்சின்னங்களை, நடுக்கடலில் உள்ள மாலத்தீவில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். சேர நாட்டிற்குத் தென் மேற்கே நடுக்கடலில், பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன. திட்டுத்திட்டாக சிதறிக்கிடக்கும் அந்தத் தீவுகளை வானத்தில் இருந்து பார்த்தால், அவை ஒரு மாலை போன்ற தோற்றத்தைத் தரும்.
வானத்தில் இருந்து பார்க்கும் வசதி பழங்காலத்தில் இல்லை என்றாலும், எப்படியோ இந்தத் தீவுகளின் அமைப்பை அறிந்து கொண்ட தமிழர்கள், அந்தத் தீவுக் கூட்டங்களுக்கு 'மாலைத் தீவுகள்' என்ற பெயரைச் சூட்டி இருந்தார்கள். நாளடைவில் இந்தத் தீவுகளின் பெயர், 'மாலத்தீவுகள்' என மருவிவிட்டது. அந்தப் பெயரை ஆங்கிலேயர்கள் இன்னும் சுருக்கமாக 'மால்டீவ்' என்று ஆக்கிவிட்டார்கள்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
கன்னியாகுமரிக்குத் தெற்கே பழங்காலத்தில் 'லெமூரியா' கண்டம்' என்ற பெரிய நிலப்பகுதி இருந்தது என்றும், பண்டைய தமிழர்களின் வாழ்விடமான அந்தப் பகுதி கடல்கோள்களால் மூழ்கிவிட்டது என்றும் கூறப்படுகிறது. லெமூரியா கண்டத்தின் அழிவுக்குப் பிறகு கடலில் தோன்றிய தீவுக் கூட்டங்களே மாலத்தீவுகள் எனப்படுகின்றன. முன் காலத்தில் இந்தத் தீவுக் கூட்டங்கள் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' என அழைக்கப்பட்டன.
சோழர்களின் கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் இந்தத் தீவுக்கூட்டங்கள் 'முந்நீர்ப்பழந்தீவு' என்றும், 'பழந்தீவு பன்னீராயிரம்' என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சேர நாட்டின் மீது சோழர்கள் பல முறை படையெடுத்துச் சென்றாலும், சேரர்களின் குலச்சின்னங்களை அவர்கள் கைப்பற்றியது இல்லை. அந்தக் குலச்சின்னங்களைத் தேடிப் பார்த்தபோது, அவை சேர நாட்டில் எங்கும் இல்லை. சேரர்கள் தங்கள் மணிமகுடத்தைப் பாதுகாப்பாக முந்நீர்ப்பழந்தீவு எனப்படும் மாலத்தீவில் மறைத்து வைத்து இருக்கிறார்கள் என்ற தகவல் மன்னர் ராஜேந்திரனுக்குத் தெரியவந்தது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
இதனைத் தொடர்ந்து. முந்நீர்ப்பழந்தீவுக்குப் படையெடுத்துச் சென்று சேரர்களின் மணிமகுடத்தைக் கைப்பற்றுவது என்று அவர் தீர்மானித்தார். கடலில் நீண்ட தூரம் பயணித்துப் போர் நடத்துவது என்பது அவருக்குப் புதியது அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது தந்தை ராஜராஜன் தலைமையில் முந்நீர்ப்பழந்தீவுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்ற அனுபவம் இருப்பதால், இந்த முறை அங்கு சென்று சேரர்களின் மணிமகுடத்தை எளிதாகக் கைப்பற்றிவிடலாம் என்று அவர் திட்டமிட்டார்.
அதன்படி சோழர்களின் மாபெரும் கடற்படை, ராஜேந்திரன் தலைமையில் தமிழகத்தில் இருந்து முந்நீர்ப்பழந்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றது. மன்னர் ராஜேந்திரன் திட்டமிட்டபடியே முந்நீர்ப்பழந்தீவுப் போரில் சோழப் படைக்கு வெற்றி கிடைத்தது. அந்தத் தீவில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சேரர்களின் மணிமகுடம், ஒளி வீசும் சிகப்பு ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட மாலை ஆகியவற்றுடன் முந்நீர்ப்பழந்தீவையும் ராஜேந்திரன் கைப்பற்றினார் என்று அவரது மெய்க்கீர்த்தியில் எழுதப்பட்டு இருக்கிறது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
"எரிபடைக் கேரளந் முறைமையின் சூடுங் குலதநமாகிய பலர் புகழ் முடியுஞ் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர் வேலைத் தொல் பொருங்காவல் பல் பழந்தீவு" என்பது மெய்க்கீர்த்தி வாசகம். முந்நீர்ப்பழந்தீவுப் போர், ராஜேந்திரனின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி இறுதியில் அல்லது ஆறாம் ஆண்டு ஆட்சி தொடக்கத்தில், அதாவது கி.பி 1017 அல்லது கி.பி.1018-ம் ஆண்டு நடைபெற்று இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.
முந்நீர்ப்பழந்தீவு எனப்படும் மாலத்தீவுப் போர் போல, அந்தத் தீவுக்கு வடக்கே கடலில் இருக்கும் லட்சத்தீவு மீதும் படையெடுத்துச் சென்று போர் நடத்தும் சூழ்நிலை சோழக் கடற்படைக்கு ஏற்பட்டது. மேற்கத்திய கடல் வணிகத்தில், லட்சத்தீவுகளும் முக்கியக் கேந்திரங்களாக இருந்தன. அந்தத் தீவுகளைக் கைப்பற்றினால் மேற்கத்திய நாடுகளுடன் நடைபெறும் வர்த்தகத்தில் தனிப்பட்ட முறையில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று ராஜேந்திரன் எண்ணியதும் இந்தப் போருக்குக் காரணமாக இருந்தது.
லட்சத்தீவு, அந்தக்காலத்தில் மாலத்தீவு ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. சேர நாட்டிற்கு நேர் வடக்கே கடலில் இருக்கும் அந்தத் தீவுக் கூட்டங்கள் சோழர்கள் காலத்தில் 'சாந்திமத்தீவு’ அழைக்கப்பட்டன. சேர நாட்டுத் தொன்மையான புராணங்களில் ஒரு தகவல் கூறப்பட்டு இருக்கிறது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
அதாவது, சேர நாட்டில் ஆட்சி செய்த சத்திரியர்கள் 21 வம்சத்தினரை பரசுராமர் தனது 'பரசு' என்ற ஆயுதத்தால் கொன்று, ஆட்சியைக் கைப்பற்றினார் என்றும், அதன் காரணமாகவே அந்தத் தேசம் ‘பரசுராமஷேத்திரம்' என அழைக்கப்பட்டதாகவும் அதில் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட பரசுராமர், தனது மணிமகுடத்தை சாந்திமத்தீவு
எனப்படும் லட்சத்தீவில் வைத்து இருக்கிறார் என்பது அந்தப் புராணத்தில் இடம் பெற்ற தகவல் ஆகும்.
இதனை அறிந்த ராஜேந்திரன், லட்சத்தீவு மீது படையெடுத்துச் சென்று அங்கு இருக்கும் பரசுராமரின் மணி மகுடத்தைக் கைப்பற்றுவது என்று முடிவு செய்தார். முந்நீர்ப்பழந்தீவுப் போர் முடிந்த மறு ஆண்டில், சோழர்களின் கப்பல் படை மன்னர் ராஜேந்திரன் தலைமையில் லட்சத்தீவு நோக்கிச் சென்றது. அந்தத் தீவை எந்தச் சிரமமும் இன்றி கைப்பற்றிய ராஜேந்திரன், அங்கு இருந்த பரசுராமரின் மணிமகுடத்தைக் கைப்பற்றி தஞ்சைக்குக் கொண்டு வந்தார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
'இந்த மணிமகுடம், சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட பொன்முடி' என்று ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ராஜேந்திரன் கைப்பற்றியது பரசுராமரின் மணிமகுடம் என்று கூறப்பட்டாலும், அந்தக் காலகட்டத்தில் பரசுராமர் இல்லை என்பதால், அந்த மணிமகுடம் சேர நாட்டின் மாகோதையில் இருந்து ஆட்சி செய்த சேர மன்னர்களின் குலச்சின்னமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் கூறப்படுகிறது.
சோழநாட்டுத் தேவாரத்தலமான திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் காணப்படும் ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி சாசனம், "பரசுராமன் மேவ அரும் சாந்திமத்தீவு அரண் கருதி இருத்திய செம்பொன் திருத்தகு முடியும் கைப்பற்றப்பட்டது" என்ற பொருளைத் தரும் வாசகங்களைக் கொண்டு இருக்கிறது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-8
சேரர்களின் குலச்சின்னங்கள் மீட்கப்பட்டது போல சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்களின் குலச்சின்னங்களையும் ராஜேந்திரன் மீட்டு இருந்தார் அல்லவா? பாண்டியர்களின் குலச்சின்னங்கள் மீட்கப்பட்டதைத்
தொடர்ந்து, அந்த நாட்டை முழுமையாக சோழர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று ராஜேந்திரன் முடிவு செய்தார். அப்போது பாண்டிய நாட்டை ஆட்சி செய்து கொண்டு இருந்த அரசர், சோழப் படைக்கு அடிக்கடி தொல்லை கொடுத்ததாகவும், அவரது ஆட்சியில் மதுரை மக்கள் பெரும் அதிருப்தி அடைந்து இருந்தார்கள் என்பதும் தெரியவந்தது.
இந்தக் காரணங்களுக்காக பாண்டிய நாடு மீது மற்றொரு முறை ராஜேந்திரன் போர் தொடுத்தார். இதற்காக மன்னர் ராஜேந்திரன் மேற்கொண்ட திக்விஜயம், அவரது குடும்பத்தில் ஒருவருக்குப் பெரிய பதவியை பெற்றுக் கொடுத்ததோடு, பாண்டிய அரச வம்ச வரலாற்றில் முக்கியமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-9
வியப்பான வினோதம்
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வினோதமான சம்பவம் இது. ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்தவாரியார், எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், கோவிலின் கருவறை அருகே வரை சென்று பக்தி சிரத்தையுடன் வழிபாடு நடத்துவார். கிருபானந்தவாரியார், ஒரு சமயம் மிகவும் ஆர்வத்தோடு, கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு வருகை தந்தார்.
கோவிலின் கிழக்கு வாசல் வழியாக கோவில் வளாகத்துக்குள் வந்த கிருபானந்த வாரியார், திடீர் என்று அங்கேயே நின்றுவிட்டார். நெடிதுயர்ந்து, கம்பீரமாகத் தோன்றிய விமானத்தை வியந்து பார்த்த அவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அருகில் நின்றவர்களிடம், “நான் இந்தக் கோவிலுக்குள் நுழைய மாட்டேன்” என்று கூறிவிட்டு திரும்பிச் செல்ல எத்தனித்தார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-10
யாரும் எதிர்பாராத அவரது இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. தனது முடிவுக்கான காரணத்தை கிருபானந்த வாரியாரே வெளியிட்டார். “கோவிலுக்கு கருவறை எந்த அளவு முக்கியமோ அதேபோலக் கொடிமரமும் மிகவும் முக்கியம். ஆனால் இந்தக் கோவிலில் கொடிமரம் இல்லை. கொடிமரம் இருந்த பீடம் வெறுமையாக இருக்கிறது. கொடிமரம் இல்லாததால் நான் இந்தக் கோவிலுக்குள் நுழைய மாட்டேன்” என்று கூறிய கிருபானந்த வாரியார், திரும்பிச் சென்றுவிட்டார்.
சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்தடுத்து நடைபெற்ற போர்கள் காரணமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியின்போது நடைபெற்ற அடாவடிகள் காரணமாகவும் கோவில் வளாகம் பெருத்த சேதத்துக்குள்ளானது. அப்போது, நந்தி சிலைக்குப் பின்புறம் இருந்த கொடிமரம் அகற்றப்பட்டுவிட்டது. (கொடிமரம் இல்லாத கோவிலின் பழைய படம் அருகே பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது). பல ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தக் கோவிலில் புதிதாக கொடிமரம் ஸ்தாபிக்கப்பட்டது. புதிய கொடிமரம் வைக்கப்பட்டதிலும் ஒரு வினோத சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-11
Related Tags About Chola Nadu
Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.