Inspirational Stories in Tamil | மனதில் உறுதி வேண்டும் | ThaenMittai Stories

ஒரு போரில் தோல்வியுற்ற அரசன் ஒருவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடி ஒளிந்துக் கொண்டான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனுடைய படைகள் மிகவும் சிறியதாக இருந்த காரணத்தால் அவனால் அந்த போரில் வெல்ல முடியவில்லை. எதிரி நாட்டு அரசனிடம் மாபெரும் படைகள் இருந்த காரணத்தால் எதிரி நாட்டினர் மிக சுலபமாக வெற்றியை அடைந்தார்கள். தோல்வி அடைந்த அரசனை கொன்று விடுமாறு வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான்.
அதனால் தோல்வியுற்ற அரசன் அருகில் இருந்த காட்டிற்கு ஓடிச் சென்று அங்கே இருந்த ஒரு பாழடைந்த குகையினுள் ஒளிந்து கொண்டான். தோல்வியை கண்டதால் அரசன் மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்டான். தோல்வி உண்டாக்கிய மனச்சோர்வினால் துணிவு இழந்து இருந்தான். எதனால் தோல்வியை அடைந்தோம் என்று எண்ணியபடி, அரசன் குகையில் படுத்து இருந்தான். அப்போது அந்தக் குகைக்குள் ஒரு சிலந்தி பூச்சியானது வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அந்த சின்ன சிலந்தி (Spider) செயல் அரசனின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த பாழடைந்த குகையின் ஒரு பகுதியில் அந்த சிறிய சிலந்தியானது ஒரு வலையைப் பின்னுவதற்கு மிக கடுமையாக முயற்சி செய்து கொண்டு இருந்தது. சிலந்தி சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையில் அது பின்னிய நூல் அறுந்து சிலந்தி பூச்சியானது கீழே விழுந்து விட்டது. இவ்வாறு பலமுறை மேலே ஏறுவதும், கீழே விழுவதுமாகவும் நடந்தது. ஆனாலும், அது தன் எடுத்துக் கொண்ட முயற்சியினை இடையில் நிறுத்தாமல் மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்துக் கொண்டே இருந்தது. அந்த சிறிய சிலந்தியானது இறுதியில் வெற்றிகரமாக அதன் வலையைப் பின்னி முடித்தது.

அரசன் அங்கு நடந்தேறிய காட்சிகள் அனைத்தினையும் கூர்ந்து கவனித்தான். இந்த சிறிய சிலந்தியே பல முறை தோல்வி அடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நானோ ஒரு நாட்டின் அரசன் நான் ஏன் முயற்சியைக் கைவிட வேண்டும்?. நான் கண்டிப்பாக மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணினான். ஆகையால் மீண்டும் தன் தோல்வியுற்ற எதிரி நாட்டினருடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த வந்த காட்டிற்கு வெளியே சென்று தனக்கு நம்பிக்கைக்குரிய நபர்களைச் சந்தித்தான்.
தன்னுடைய நாட்டில் உள்ள வீரர்களை எல்லாம் ஒன்றிணைத்து பலம் மிகுந்த ஒரு இராணுவ படையை உருவாக்கினான். தன் எதிரிநாட்டு வீரர்களுடன் மிக தீவிரமாகப் போர் புரிந்தான். இறுதியாக அந்த போரில் வெற்றியும் அடைந்தான். அதனால் அந்த அரசன் எதிரி நாட்டிடமிருந்து தன் நாட்டினை மீட்டியெடுத்து மீண்டும் அரசன் ஆனான். போரில் தோல்வியுற்று அந்த பாழடைந்த குகையினுள் படுத்து இருக்கும் அப்போது, அவனுக்கு அறிவுரை போதித்த அந்த சிறிய சிலந்தி பூச்சியினை அவன் என்றுமே மறக்கவில்லை.

நமக்கு ஏற்படும் தோல்வியை வெற்றியாக உரு மாற்றிக் கொள்ள மனதிற்குள் மிகுந்த தன்னம்பிக்கை எழ வேண்டும். ஒவ்வொரு தோல்வியும் நம்மை செதுக்கும். நம் எதிர்கொள்ளும் தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்டு செயல்படும் போது வெற்றி நிச்சயம் உண்டு. எத்தனை முறை தோல்வியை அடைந்தாலும் வெற்றி எனும் இலக்கினை அடைந்தே தீருவேன் என்ற 'மனதைரியத்தோடு' செயல்பட்டால் நாம் தோல்வியை தோற்கடிக்க வைக்கலாம்!.
நம் வாழ்வில் எதிர்கொண்டு செயல்படும் செயற்பாடுகளில் இருந்து வெற்றி காண துணிவு வேண்டும், நம்பிக்கையும் வேண்டும், அதைவிட மனதில் உறுதி வேண்டும். துணிவு வேண்டும் என்று சொல்லும் போது அது முரட்டுத்தனமான துணிவாக இருத்தல் கூடாது. உதாரணமாக காட்டில் புலி பதுங்குவதற்கு காரணம் அதனுடைய நிதானமே ஆகும். அது நின்று நிதானமாக பாய்ந்து அடிக்கும். அந்த புலியை போன்ற நிதானத்துடன் கூடிய துணிவு இருத்தல் வேண்டும். அப்போது தான் நாமும் நின்று நிதானமாக விளையாடி வெல்ல முடியும். நாம் இலக்கை நோக்கி பயணிக்கின்ற பயணத்தில் வெற்றி பெற இது போன்ற துணிவு எப்போதும் வேண்டும்.

ஒரு செயலை நன்கு தீர ஆராய்ந்து தெரிந்துக் கொண்ட பிறகு தான் அச்செயலை தொடங்க வேண்டும். ஒரு செயலை செய்ய தொடங்கிய பின்பு, அச்செயலைப் பற்றி ஆராய்வது குற்றம். இடையூறு ஏற்பட்டால் அச்செயலை பாதியில் நிறுத்துவதோ, அல்லது கைவிட்டுவிடுவதோ இழுக்காகும். எப்போதும் நினைத்த உடனேயே ஒரு செயலில் ஈடுபடக் கூடாது. ஒரு செயலை செய்யும் போது அதன் வலியறிந்து அதில் ஈடுபடவேண்டும். (ஒரு சில செயல்கள் செய்யும் போது சில நேரங்களில் அவ்வப்போது களத்தின் நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்ப சில மாற்றங்கள் எடுக்கப்பட வேண்டி வரும் - அது வேறு).

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
எந்த ஒரு செயலையும் துணிவு இல்லாமல் தொடங்கினால் அது அச்செயல் தெரிந்துவிடும். ஒரு செயலை துணிவு இல்லாமல் செய்யும் போது சோர்வு ஏற்பட்டாலோ அல்லது இடையூறு ஏற்பட்டாலோ அச்செயலை பாதியிலேயே விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், துணிவு இருந்தால் தான் அச்சம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் தெளிவாக செய்து முடிக்க முடியும். அச்சம் என்பது வாழ்வில் மிகப்பெரிய ஒரு மனத்தடையாக இருக்கிறது. அச்சம் இருக்கும் பட்சத்தில் அது நம்மை முழுமையாக செயலாற்ற விடாமல் தடுக்கிறது. அது குட்டையில் இருக்கும் நீர்ப்போல் தேங்கி நிற்கச் செய்கிறது.

அது நம் விரைவாக செயல் புரிவதைத் தள்ளிப் போடுகிறது. அச்சம் நம்மிடம் இருக்கின்ற போது சோம்பல், மறதி, போன்ற குணங்களும் நம்மைத் தேடி வருகின்றன. நாம் செய்யவேண்டிய செயல்களை செய்ய முடியாமல் தடுமாறுகிறோம். நாம் ஒரு செயலை செய்வதற்கு அஞ்சத் தொடங்கினால் நம்மிடம் உள்ள பலத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அது நம்முடைய எதிரியின் பலத்தை கூட்டச் செய்கிறது. ஆதலால் அச்சம் தவிர்த்து துணிவுடன் செயல்பட வேண்டும்.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)