Famous Personalities | ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள உதவும் கதை!

ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள உதவும்

ஆளுமை என்றால் என்ன? ஆளுமை என்பது இயல்பான பண்புகளை மட்டும் உள்ளடக்கியதல்ல!. மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் மற்றும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் அறிவாற்றல் மற்றும் நடத்தை முறைகளால் ஏற்படும் வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கியதாகும். தன்னைத் தானே ஆள்வதும், அவரே மற்றவர்களையும் ஆளும் வல்லமை உடைய மனிதர்களை ஆளுமைமிக்க மனிதர்கள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு துறைகளிலும் போட்டிகள் நிறைந்துள்ள இந்த உலகில் நம்முடைய ஆளுமைத்திறனை எப்படி வளர்த்து உயர்த்துக் கொள்ளவது?.
நமக்குள் இருக்கும் ஆளுமைத் திறனை கண்டுபிடித்து மெருகேற்றிக் கொள்ள, நிறையப் புத்தகங்களை படிக்க வேண்டும். படித்துக் கொண்டே இருந்தால் சோம்பேறி உண்டாக்கும் நினைத்துக் கொண்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. நமது கல்வி முறையில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இறுதி பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்று படிப்பதையே ஓர் அடிப்படையாக இலக்காக கொண்டு படிக்கிறார்கள். ஆகையால் நம்மில் மிகப் பெரும்பாலோருக்குப் படிப்பது என்பதே ஏதோ ஒரு வேண்டா வெறுப்பு செயல் போன்று இருக்கிறது. எதோ ஒரு டிகிரி வாங்கியாச்சு, எப்படியோ ஒரு வேலையிலும் சேர்ந்தாச்சு; நல்ல சம்பளம் வருகிறது. இனிமேல் படிக்கவே வேண்டாம் என்ற ஒரு மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். இவ்வாறு இருத்தல் என்பது தவறு!.
அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிக்க வேண்டும். படிப்பு என்பது எதோ ஒரு வகையில் நின்று விடலாம்; ஆனால் கல்வி கற்றல் என்பது இறக்கும் வரை தொடர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும். விவசாயத்தில் நல்ல மகசூல் பெறுவதற்கு ஆழவும் உழ வேண்டும் மற்றும் அகலவும் உழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆழ உழுதல் என்பது நாம் வேலை பார்க்கும் துறையில் பணி குறித்த அனுபவங்கள் பெறுதல், அலுவல் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுதல், நுண் விவரங்கள் கற்றுக் கொள்ளுதல், தொழில் நுட்பம் பற்றி தெரிந்துக் கொள்ளுதல், நிகழ்காலத் தொழில்நுட்ப மாற்றங்கள் என்ன, உலகளாவிய மாற்றங்கள் என்ன ஆகியவற்றைப் பற்றி ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அகல உழுதல் என்பது, நாம் பணிபுரியும் துறையில் பணி செய்யும் நுணுக்கங்கள் மற்றும் அனுபவம் சார்ந்த விஷயங்களைத் தவிர, மேலும் உருப்படியான வேறு பல விஷயங்கள் தெரிந்துக் கொள்ளுதல் - நாட்டு நடப்பு, அரசியல், உலகளாவிய மாற்றங்கள், பொருளாதாரம், பொது அறிவு என்று பல விஷயங்களில் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது ஆகும். எதிலும் நுனிப்புல் மேயக் கூடாது; அறை குறை அறிவை வைத்துக்கொண்டு ஒரு கைதேர்ந்த நிபுணர் போல ஆட்டம் போடக் கூடாது. எந்த ஓர் பிரச்சனையை வரும் போதும் சரியான தீர்வை கண்டுப்பிடித்து பிரச்சனையை சரி செய்ய வேண்டும். எளிமையான தீர்வு என்று நாடிப் போய் மீண்டும் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
போட்டி போடுவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுவது என்பது மிக அவசியம். எந்த ஒரு போட்டியிலும் குறுக்கு வழியில் ஜெயித்து விடலாம் என்று நினைப்பது, ஒரு நாளும் நீண்டகால வெற்றியையோ, மதிப்பையோ சுவைக்க முடியாது. பேசும் திறன், எழுதும் திறன் இரண்டினையும் வளர்த்துக் கொள்ளுதல் மிக மிக அவசியம். ஒரு குழுவுக்குத் தலைவர் இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாகப் பேச்சுத் திறனும் அவசியமானது. ஆளுமைத்திறன் மேன்மையடைய செய்வதில் உடல்வளமும், மனவளமும் மிக இன்றியமையாதது ஆகும். ஆளுமைத் திறன் என்பது ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் மிக முக்கியமான விஷயம் ஆகும். பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்குப் செல்பவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆளுமைத் திறன் மிகவும் அவசியம். எழுத்துத் திறன், பேச்சுத் திறன், உடை அலங்காரம், தலைமை வகிக்கும் பண்பு, சூழ்நிலையை சமாளிக்கும் திறன், இன்டெர்வியூவில் பேசும் திறன் எனப் பலவும் ஆளுமைக்குள் அடங்கும்.

நாம் பேசுகின்ற பேச்சு எப்போதும் பொருள் பொருந்திய மற்றும் கருத்து ஆழம் மிக்கவையாக இருத்தல் வேண்டும். இதனையே தெய்வப்புலவர் திருவள்ளுவர்,

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
என்கிறார். அதனோடு, சொல்லுகிற சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். பயன் இல்லாத சொற்களை பயன்படுத்தக் கூடாது என்பதை தான்

"சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயணிலாச் சொல்"

என்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
சொல்லக்கூடிய விஷயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒரு அலுவலக பணியில் தங்குதடையின்றிப் பேசி உங்கள் கருத்துகளைத் தெளிவாய் விளக்கி சொல்லும் திறன், ஒரு பெரிய குழுவின் முன்பு எதற்கும் அஞ்சாமல் துணிவாய்ப் பேசும் திறன், மேடைப் பேச்சுத் திறன்களை வளர்த்து கொள்ளுதல் மிக மிக அவசியம் ஆகும். அதே போன்று தான் எழுதுகின்ற திறனும் ரொம்பவே அவசியம் ஆகும். ஒரு மின்னஞ்சல் அனுப்பினாலும் கூட அதில் சரியான கருத்தோட்டம், தெளிவு, இலக்கணப் பிழை, சொற்பிழை இல்லாது இருத்தல், மொழியில் கண்ணியம், அழுத்தம் இவை எல்லாம் இருக்கவேண்டும். எல்லாமே முயற்சி, பயிற்சியில் வரவேண்டும். எழுதும் திறனும் மற்றும் பேசும் திறன் இவ்விரண்டு திறனும் சேந்திருப்பவரே ஆளுமையில் சிறந்து விளங்குவார்.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)