கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-5

அடித்தளம் அமைத்துக் கொடுத்த அரசிகள்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். மாமன்னர் வீர சிவாஜி, இந்தியாவின் ஆன்மிகத்தை உலகுக்குக் கொண்டு சென்ற சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள், இளமைக் காலத்தில் தாயின் அரவணைப்பு அவர்கள் ஊட்டிய அறிவு ஆகியவை காரணமாக விஷய ஞானம் பெற்று வாழ்வில் உச்சத்தை எட்டினார்கள் என்பதை வரலாறு சொல்கிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
அதேபோல மன்னர் ராஜேந்திரன் வியத்தகு பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள், அவரது தாய், சிற்றன்னை மற்றும் அத்தை ஆகிய அரசிகள் என்பதை அவரது இளமைக்கால வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது. மன்னர் ராஜராஜன் 15 பெண்களை மணந்து இருந்தார். அவர்களில் ஒருவரான லோகமாதேவி பட்டத்து ராணி.
சோழர்குல வழக்கப்படி பட்டத்து ராணிக்குப் பிறக்கும் ஆண் குழந்தையே அடுத்த வாரிசாகக் கருதப்படுவார். லோகமாதேவிக்கு அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் அவருக்கு ஆண்குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால், மன்னரின் மற்ற மனைவிகளில் யார் ஆண் வாரிசைப் பெற்றெடுக்கப் போகிறார்கள் என அரச குடும்பத்தினர் ஆவலாக எதிர்பார்த்து இருந்தார்கள்.

அப்போது ராஜராஜனின் மனைவிகளில் ஒருவரான கொடும்பாளூர் வேளிர் குலத்தைச் சேர்ந்த திரிபுவனமாதேவி என்ற வானவன் மாதேவி கருவுற்றார். இதை அறிந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்ததோடு, அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாளில் வானவன் மாதேவி அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மன்னரின் மனைவிக்கு ஆண் வாரிசு பிறந்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி சில நொடிகளில் தஞ்சை நகர் முழுவதும் வானவன் மாதேவியின் தனி அறைக்கு வந்து, தனது வாரிசான பார்த்த ராஜராஜனின் உள்ளம் பூரித்தது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
குழந்தை பிறந்த சரியான நேரத்தை சேடிப் பெண்களிடம் இருந்து தெரிந்து கொண்ட ஜோதிடர்கள், அந்த நேரத்தில் எந்த எந்தக் கோள்கள் எங்கே இருந்தன என்பதைக் கணக்கிட்டு, குழந்தைக்கு ஜாதகம் கணிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஜோதிடர்கள் சில நாட்களிலேயே குழந்தையின் ஜாதகத்தைத் துல்லியமாகக் கணித்து மன்னரிடம் வழங்கினார்கள்.
“இந்தக் குழந்தை, வீரத்திலும் அறிவு, ஆற்றலிலும் தந்தையை மிஞ்சிவிடுவார். உலகின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்து, இதுவரை சோழ மன்னர்கள் வம்சத்தில் எவருமே காணாத கீர்த்தியைப் பெற்றுப் புகழோடு திகழ்வார்” என்று ஜோதிடர்கள் கணித்துக் கூறினார்கள்.

அவர்கள் கூறிய ஒவ்வொரு கணிப்பும், மன்னர் ராஜராஜனைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. சோழர்குல மன்னர்களில், ராஜராஜனின் தந்தை சுந்தரசோழர் மிக அழகிய தோற்றம் கொண்டவர் என்று புகழப்படுவது உண்டு. அவரது அழகையும் மிஞ்சும் வண்ணம் இந்தக் குழந்தை காணப்பட்டதாக அனைவரும் கருத்துத் தெரிவித்தார்கள்.
அமைதியான சூழ்நிலைக்காக குழந்தையும், வானவன் மாதேவியும் தஞ்சையில் இருந்து சற்றுத் தொலைவில் இருந்த பழையாறு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தஞ்சை அரண்மனைக்கு நிகரான தோற்றம் மற்றும் வசதிகளுடன் இருந்த பழையாறு அரண்மனை, ராஜேந்திரனின் அத்தை குந்தவை, சிற்றன்னை பஞ்சவன் மாதேவி மற்றும் பல அரசிகளின் வசிப்பிடமாக விளங்கியது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
அங்கே தவழ்ந்து விளையாடிய ராஜேந்திரன், கொழு கொழு குழந்தையாகவும், புன்சிரிப்புடன் கூடிய அழகிய வதனத்தையும் கொண்டு இருந்ததால், அரசிகள் அனைவரும் போட்டி போட்டு அவரை வாரி எடுத்துக் கொஞ்சி மகிழ்ந்தார்கள். அவர்களின் அன்பு மழையில் நனைந்தபடி குழந்தை ராஜேந்திரன் வளர்ந்தான்.
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil | Part-5
“அழகில் மன்மதன் போல விளங்கிய அந்தக் குழந்தை, தன் புன்சிரிப்பாலும், உடலின் அழகினாலும் பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஊட்டினான்" என்று கரந்தைச் செப்பேடு புகழாரம் சூட்டி இருக்கிறது. குழந்தை தவழும் பருவத்தைத் தாண்டி, நடக்கத் தொடங்கும்போது தனது பாதங்களை ‘டப், டப்’ என்று தரையில் ஓங்கி வைத்து நடக்கும் அல்லவா? ராஜேந்திரன் குழந்தையாக இருந்தபோது நடை பழகிய காட்சியைக் கரந்தைச் செப்பேடு, "செவிலித்தாயின் கையைப் பிடித்துக் கொண்டு, என் கனத்தைத் தாங்க பூமிக்கு வலிமை உண்டா என்ற ஐயத்தோடு நடப்பது போல மெல்ல, மெல்ல நடந்தான்" என்று கவித்துவமாக வர்ணித்துச் சொல்லி இருக்கிறது. அரசகுலப் பெண்கள் சீராட்டி வளர்த்ததால், ராஜேந்திரன் நல்ல உடல்நலத்துடன் திடகாத்திரமான வாலிபராக வளர்ந்தார்.”
சிறுவயதில் அறநெறிகளைக் கற்றுக்கொள்ள அவருக்கு நல்ல வாய்ப்பாக, ராஜராஜனின் சகோதரி குந்தவை, கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவி ஆகிய இருவரும் அமைந்து இருந்தது, அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். குந்தவை, அறிவு நுணுக்கம் கொண்டவர்.

எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் எளிமையாகத் தீர்த்து வைப்பதில் தேர்ந்தவர். அவரது ஆலோசனைப்படி செயல்பட்டதால் தான் மன்னர் ராஜராஜன் பல அரிய செயல்களைச் செய்ய முடிந்தது என்பது பலரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட குந்தவை, தனது மருமகன் ராஜேந்திரனின் மனதில் பதியும்படி நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார்.
கண்டராதித்தனின் மனைவியும், ராஜராஜனின் பாட்டியுமான செம்பியன் மாதேவி, சிறந்த பக்திமான். ஏராளமான கோவில்களுக்குத் திருப்பணி செய்தவர். அவர், ராஜேந்திரனுக்கு ஆன்மிகம் சார்ந்த நல்ல கதைகளைக் கூறுவதன் மூலம் அறநெறிகளைப் போதித்தார்.

குந்தவை, செம்பியன் மாதேவி, சிற்றன்னை பஞ்சவன்மாதேவி ஆகியவர்களின் வழிகாட்டுதலே, பிற்காலத்தில் ராஜேந்திரன், சைவ சமய வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு, சிற்பம், ஓவியம், இசை முதலான அனைத்து கலைகளின் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்ட மிகச் சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டதற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
ராஜேந்திரனின் சிற்றன்னை பஞ்சவன் மாதேவி, ராஜேந்திரனை தான் பெற்ற பிள்ளை என்றே நினைத்து, அவர் மீது பாசமழை பொழிந்தார். ராஜேந்திரனும் அவரிடம் அலாதிப் பிரியம் கொண்டு இருந்தார். தனது தாய்க்குக்கூட கோவில் கட்டாத ராஜேந்திரன், சிற்றன்னை பஞ்சவன்மாதேவி இறந்தபோது அவருக்குப் பள்ளிப்படைக் கோவிலைக் கட்டி அஞ்சலி செலுத்தினார்.
மன்னர் ராஜராஜனின் அரச குருவாக இருந்தவர், ஈசான சிவ பண்டிதர். ஆரம்ப காலங்களில் இவரே ராஜேந்திரனுக்கும் குருவாக இருந்து பல கலைகளைக் கற்றுக் கொடுத்தார். ஈசான சிவபண்டிதர் மறைவுக்குப் பிறகு, ராஜேந்திரனின் குருவாக அமைந்தவர் சர்வசிவ பண்டிதர். பல அறநூல்களைக் கற்றுத்தேர்ந்த சர்வசிவ பண்டிதர் மூலமாக பழங்காலச் சோழ மன்னர்களின் வரலாறு, இலக்கியம், இலக்கணம், அரசியல், மற்றும் போர் முறைகள் ஆகியவற்றை ராஜேந்திரன் கற்றுத் தேர்ந்தார்.

காஷ்மகாரி ஆராவமுது புருஷோத்தமனான ராஜேந்திர சிம்மம்' என்ற அறிஞரிடத்தில் வேதங்கள், சாஸ்திரங்கள், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றையும் ராஜேந்திரன் கற்றுக் கொண்டார். கரந்தைச் செப்பேடு வாசகங்களை எழுதியவர்களில் இந்தப் புருஷோத்தமனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறநூல்களைக் கற்றுக் கொண்ட அதே நேரம், கடுமையான உடற்பயிற்சி மூலம் திண்தோள் கொண்ட வீரராக ராஜேந்திரன் படைத் தலைவர்களிடம், குதிரையேற்றம், யானையேற்றம், ஈட்டி எறிதல், வாட்போர் ஆகியவற்றின் நுணுக்கங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்.
ராஜேந்திரன், இளம் வயதிலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்ததால், யாராலும் வெல்ல முடியாத வீரராகத் திகழ்ந்தார். அரண்மனையில் பெற்ற போர்ப் பயிற்சிகளை நடைமுறையில் பயன்படுத்தும் வாய்ப்பை, அவருக்கு மன்னர் ராஜராஜன் விரைவிலேயே ஏற்படுத்திக் கொடுத்தார். ராஜராஜன் தனது முதல் படையெடுப்பு தொடங்கி அனைத்துப் போர்களிலும் ராஜேந்திரனை படைத் தளபதி என்ற அளவில் முன்னிறுத்தி பெருமைப்படுத்தினார்.

தந்தையின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் போர்களிலும் ராஜேந்திரன், தனது வீரதீரச் செயல்களால் வெற்றியைப் பெற்றுத் தந்தார். தமிழக வரலாற்றின் பக்கங்களை அலங்கரிக்கும் அந்த வெற்றிகள் அனைத்தும் வியப்பான தகவல்களைக் கொண்டு இருக்கின்றன.

Read Also: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

வியப்பான வினோதம்

சோழ வம்சத்து அரசிகளில் உச்சபட்ச புகழைப் பெற்றவர் பெரிய பிராட்டி என்று அழைக்கப்பட்ட செம்பியன் மாதேவி (கி.பி.910-1001). இவர், சோழ மன்னர் கண்டராதித்தனின் பட்டத்து அரசி ஆவார். இளம் வயதிலேயே விதவையான செம்பியன் மாதேவி தன்னை முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். தமிழகம் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டு இருந்த பல கோவில்களை கற்றளியாக மாற்றினார். ஏராளமான நன்கொடைகளை கோவில்களுக்கு வழங்கினார்.
ராஜேந்திரன் தனது இளமைக் காலத்தில், கொள்ளுப் பாட்டியான செம்பியன் மாதேவியிடம் ஆன்மிகக் கருத்துகளைக் கற்றுக் கொண்டார். ராஜேந்திரன், பிற்காலத்தில் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவராகத் திகழ்ந்ததற்கு செம்பியன் மாதேவியே முக்கிய காரணம். அப்படிப்பட்ட செம்பியன் மாதேவிக்கு, நாகப்பட்டினம் அருகில் செம்பியன் மாதேவி என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் 3.5 அடி உயர செப்புச் சிலையை மன்னர் ராஜேந்திரன் செய்து வைத்தார்.

அந்தச் சிலை கடந்த 1929-ஆம் ஆண்டு அங்கு இருந்து கடத்திச் செல்லப்பட்டுவிட்டது. இப்போது அந்த அழகிய சிலை, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள “பிரீர் கேலரி ஆப் ஆர்ட்” என்ற அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. செம்பியன் மாதேவியின் சிலையை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!.

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook