இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
நம் தாய் நாடு சுதந்திர காற்றை சுவாசிக்க, தனது சுவாசத்தை துறந்த மன்னர்கள் பலர் உண்டு. இந்த சுதந்திர திருநாளில் அவர்களில் சிலரை நினைவுகூர்வோம். இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கடல் கடந்து தூத்துக்குடிக்கு 2 ஆங்கில பாதிரியார்கள் வந்தனர். தூத்துக்குடி கரிசல் காட்டில் பந்து பந்தாய் வெடித்து சிதறி கிடந்த பருத்தியை பார்த்து வியந்தனர். உடனே அதுபற்றி இங்கிலாந்து ராணி விக்டோரியாவுக்கு கடிதம் எழுதினர். அந்த கடிதமே ஆங்கிலேயர்கள், இந்தியா வருவதற்கான முதல் அழைப்பாக அமைந்தது.
அந்த கடிதத்தை பார்த்த இங்கிலாந்து ராணியின் அனுமதியோடு இங்கு வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கிய வணிக நிறுவனம் தான் ஈஸ்ட் இந்தியா கம்பெனி. இந்தக் கம்பெனியிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாததால், தமிழ் மன்னர்களிடம் வரி வசூலிக்கும் உரிமை ஆங்கிலேபயர்களுக்கு வழங்கப்பட்டது. சொந்த நாட்டில் வாழ்வதற்கு ஆங்கிலேயருக்கு வரியா? என தமிழக மன்னர்கள் சிலர் வெகுண்டு எழுந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் ஆகியோர் தொடங்கி வைத்த விடுதலை போர் புயலாக சுழன்று அடித்தது.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலத் தளபதி சிறைபிடித்து கயத்தாறில் தூக்கிலிட்டான். கட்டபொம்மனின் கோட்டை, கொத்தளங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சிவகங்கை சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை எந்தவித காரணமும் இல்லாமல் கர்னல் பான்சோர் சுட்டுக் கொன்றான். இதனால் இராணி வேலுநாச்சியார், மருது பாண்டியர்களுடன் திண்டுக்கல்லுக்கு வந்து ஹைதர் அலியின் ஆதரவோடு விருப்பாச்சி கோபால் நாயக்கரின் பாதுகாப்பில் தங்கி இருந்தனர்.
இராணி வேலுநாச்சியார் குதிரை ஏற்றம், வாள் வீச்சு, போர் சிலம்பு போன்ற வீரக் கலைகளை கற்ற வீராங்கனை ஆவார். 7 ஆண்டுகளுக்கு பின்பு சிவகங்கை சென்று தனது கணவரை கொன்ற கர்னல் பான்சோரை தூணில் கட்டி வைத்து அவனுக்கு முன்பாக சிம்மாசனத்தில் அமர்ந்தார். இதனால் வெகுண்டு எழுந்த ஆங்கிலேயர்கள் வேலு நாச்சியார் நகரத்தை அக்னியால் அழித்தனர்.
மேஜர் வெல்ஸ் மருது பாண்டியர்கள் நிகரற்ற மாவீரர்கள் ஆவர். இதில் பெரிய மருது வளரி எறிவது, சுழல் பட்டா சுழற்றுவது ஆகியவற்றில் வல்லவர். மேஜர் வெல்ஸ் என்ற ஆங்கிலேயர் பெரிய மருதுவிடம் அந்த வீரக்கலைகளை கற்றுக்கொண்டார். சிறுவயல் அரண்மனையில் சின்ன மருதுவோடு அமர்ந்து விருந்து உண்டார். மேஜர் வெல்ஸ் எழுதிய “எனது தென்னக ராணுவ நினைவுகள்” என்ற தனது நாட்குறிப்பில் மருது பாண்டியர்களை போற்றி புகழ்ந்துள்ளார்.
ஆனால் நன்றி கெட்ட மேஜர் வெல்ஸ், ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி மருது பாண்டியர்களை சிறை பிடித்தான். பின்னர் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டனர். அதோடு மருது பாண்டியர்களை ஆதரித்த 500 வீரர்களின் தலையை துண்டித்தனர். மருது பாண்டியர்களின் உடல்கள் காளையார் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. மருது பாண்டியர்களோடு இணைந்து செயல்பட்ட 71 வீரர்களை கப்பலில் ஏற்றி நாடு கடத்தினான் மேஜர் வெல்ஸ்.
வரி கேட்டு தொல்லைச் செய்த ஆங்கிலேயர்களை எதிர்த்து தமிழ்நாட்டில் தீரத்துடன் முதன் முதலாக புலியாக மாறிப் பாய்ந்தது பூலித்தேவன் தான் என்பது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை. 1755-ல் நெல்லை மாவட்டத்தில் நெற்கட்டும் சேவல் கோட்டையை முற்றுகையிட்டனர்.
அங்கே வரி வசூல் செய்த கர்னல் ஹெரோனையும், அவனுடைய படைகளையும் விரட்டி அடித்து தென்னகத்தின் சுதந்திர தாகத்திற்கு வித்திட்ட முதல் மாவீரன் பூலித்தேவன் ஆவார். 1767-ல் கைது செய்யப்பட்ட பூலித்தேவன் சங்கர நயினார் கோவிலில் வழிபட வேண்டும் என பிரிட்டிஷாரிடம் கேட்டு பூலித்தேவன் கருவறைக்குள் சென்றார். போனவர் மீண்டும் திரும்பி வரவேயில்லை.
இவர்கள் இந்திய சுதந்திர வரலாற்றில் களமாடிய வீரத்தமிழர்கள். சிவகங்கைச் சீமையில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் கொடி உயர்த்தினர்கள். இது தமிழகத்தின் சுதந்திர வேட்கையை வளர்த்தது. இதன் பின்னர், 1806-ம் ஆண்டு வேலூர் கோட்டையில் ஏற்பட்ட சிப்பாய் புரட்சி விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. விடுதலை போராட்ட வீரர்களால் ஆங்கிலேயே சிப்பாய்கள் 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சில வீரர்களில் தீரன் சின்னமலை குறிப்பிடத்தக்கவர்.இன்றைய கேரளாவின் பகுதியிலும், கொங்கு மண்டலத்தின் பகுதியில் ஈஸ்ட் இந்திய கம்பெனியின் படை ஒன்றாக சேராதவாறு, பெரும் தடையாகச் தீரன் சின்னமலை விளங்கி வந்தார். இதனால் ஆங்கிலேயர் தீரன் சின்னமலை மீது பகைக் கொண்டனர். தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார்.
தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மாமனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படும் வ.உ.சி, அவர்கள் புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரின் துணிச்சலான தன்மையே அவரை ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயர் எடுக்க வைத்தது.
அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். அவருக்கு வெள்ளையர்கள் அளித்த சிறை தண்டனை மிகக் கொடுமையானது. சிறையில் செக்கிழுத்த வ.உ.சி., நாம் போற்றப்பட வேண்டிய விடுதலை போராட்ட வீரர்களில் முதன்மையான தமிழர்.
வ.உ.சிதம்பரனார், பாரதி, சுப்ரமணிய சிவா ஆகியோர் மும்மூர்த்திகள். தம்முடைய இளம்வயதிலேயே அரசியல் பிரவேசம் செய்தவர் சுப்ரமணிய சிவா. தேச விடுதலைப் போராட்டத்திற்கு தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர். இவரை பின் தொடர்ந்த வாஞ்சிநாதன் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். வ.உ.சி.க்கு சிறை தண்டனை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று பின்னர் தானும் சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்தார் வாஞ்சிநாதன்.
நம் நாட்டு சுதந்திர போராட்டத்தை அகிம்சை வழியில் வென்று காட்டியவர் மகாத்மா காந்தி. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக உப்பு சத்தியாகிரகத்தை காந்தி தொடங்கினார். 1930ல் அவர் தண்டி யாத்திரையை மேற்கொண்டார். 1930 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக ராஜாஜிக்கு தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது.
வரலாற்றுப் புகழ்பெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நடைப்பயணத்தை அவர் மேற்கொண்டார். திருச்சியில் இருந்து அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த வேதாரண்யம் கடற்கரைக்கு நடைப்பயணம் மேற்கொள்வது என்று முடிவெடுத்தார்கள். பின் தமிழ்ப் புத்தாண்டு அன்று நடைப்பயணம் தொடங்கப்பட்டது.
திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி சென்றார் திருப்பூர் குமரன். தனது தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றார். காவலர்களால் திருப்பூர் குமரன் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டையை உடைத்தார்கள். இருப்பினும் கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடியே மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் தன் இன்னுயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால் 'கொடிகாத்த குமரன்' என்று அழைக்கப்படுகிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அந்த பங்கிற்கு தமிழ்நாடு மக்கள் தோள் கொடுத்தார்கள். 1896 ஆண்டு முதல் 1946 ஆண்டு வரை இருபது முறை தமிழ்நாட்டிற்கு காந்தி வந்துள்ளார். அவரை ‘மகாத்மா’ எனக் கொண்டாடப்படுவதற்கு முன்பே தமிழ்நாட்டு மக்கள் அவரை மகானாக தரிசித்தார்கள்.
ஆடுவோமே, பள்ளு பாடுவோமே என்று மகாகவி பாரதியார் பாடினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்களின் எழுச்சிமிக்க பாடல்களாலும் தேசிய இயக்கம் மென்மேலும் வலிமை பெற்றது. நம் நாட்டு விடுதலை இயக்கத்தில் காந்திய நெறிகள் பற்றியும் அவை பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை பற்றியும் அவர்களின் பாடல்கள் எடுத்துக் கூறின. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருது" என்று அவர் பாடினார்.
இப்படி வீரம், விவேகம், கலை என அனைத்து துறைகளிலும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏராளம். அதிலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு ரொம்பவே மகத்தானது என்று குறிப்பிட்டு சொல்லலாம். இந்திய சுதந்திரத்தை போற்றுவதோடு, சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களையும் நாம் நினைவுகூர்வோம். ஜெய்ஹிந்த்!
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.