கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு | Chola History in Tamil | Part-1

வணங்கதக்க வரலாற்று நாயகன்

தமிழர்கள், தனிப்பெரும் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று தலைநிமிர்ந்து கூறுவதை மெய்ப்பிக்கும் அற்புதமான நிகழ்வுகளாக, இந்தத் தொடரில் நாம் காண இருக்கும் அதிசயங்களின் வயது-ஆயிரம் ஆண்டுகள். தமிழக வரலாற்றில் எவருமே எண்ணிப்பார்க்க முடியாத மாபெரும் சாதனைகள் அரங்கேற்றப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.
வானம் பார்த்த பூமியாகக் கிடந்த வெற்று இடத்தில் புத்தம் புதிதாக ஒரு தலைநகரை அமைத்த மகத்தான செயல், இன்றைக்குச் சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கி.பி.1023-ம் ஆண்டு தொடங்கி, உலகமே வியக்கும் வண்ணம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இப்போதைய பொறியாளர்கள் கூட ஆச்சரியப்படும் வகையில், சமதளமான இடத்தில் 16 மைல் நீளம், 3 மைல் அகலம் என்ற அளவில் மிகப்பெரிய ஏரி அங்கே தோண்டப்பட்டது அதிசயமான செயல் என்றே பார்க்கப்படுகிறது.
Read Also: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்ததுபோல, தஞ்சைப் பெரிய கோவிலுக்கு இணையாக, வானுயர்ந்த கற்கோவிலை அதே தலைநகரில் நிர்மாணித்தது. அசாத்தியமான அருஞ்செயல் ஆகும். அபூர்வமான இந்தச் சாதனைச் சம்பவங்கள், கற்பனைக்கதைகள் அல்ல - உண்மையில் நடத்தேறிய உத்தமமான செயல்கள் என்பதற்குக் கண்கூடான ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன.
அடுத்தடுத்துத் தோன்றிய 14 தலைமுறை மன்னர்கள், 250 ஆண்டு காலம் ஆட்சிப் பீடமாகப் பயன்படுத்திய அந்தத் தலைநகர், சீரோடும் செல்வச் செழிப்போடும் விளங்கியது. எதிரிகளின் படையெடுப்பால் தரைமட்டமாக்கப்பட்ட அந்த நகரின் தடயமே இப்போது அங்கே இல்லை என்பதுதான் வேதனை.

இப்படிப்பட்ட அவல நிலையிலும், வானுயர்ந்து நிற்கும் கற்கோவிலின் உருக்குலையாத எழிலும், பிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஏரியின் எச்சமும், ஆயிரம் ஆண்டு வரலாற்றைச் சுமந்தபடி இப்போதும் அங்கே காட்சி அளித்துக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் இருந்து 10 மைல் தொலைவில் இந்த ஆச்சரியங்களின் மிச்ச மீதிகளைப் பார்க்கலாம்.
பொன்னேடுகளில் பொறிக்கத்தக்க இந்தப் பெருமைமிகு நிஜத்தில் நிறைவேற்றிய நிகரில்லாத நாயகன் - கடாரமும் கங்கையும் கொண்ட சோழன் கோப்பரகேசரி ராஜேந்திர சோழன் ஆவார். புதிய தலைநகரை உருவாக்கியது. கற்கோவிலைக் கட்டியது. ஏரியை அமைத்தது ஆகியவை அவரது சரித்திரச்சாதனைகளின் ஓர் அங்கம் மட்டுமே.
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History-1, ThaenMittai Stories
பழங்கால இந்திய மன்னர்களில் எவருமே செய்ய முடியாத அளவில், போர்கள் மூலம் பெரும் பகுதி நிலத்தைத் தனது ஆட்சியின்கீழ் கொண்டு வந்து, திறம்பட ஆட்சி செய்த பேரசர் என்ற முத்திரை தான் அவரது புகழை முன் நிறுத்துகிறது. தொலை தூரத்தில் கங்கை வரை உள்ள நாடுகளை வென்றதன் காரணமாக, “கங்கை கொண்ட கோப்பர கேசரி" என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது.

தொலைவில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போரில் வென்றதன் மூலம் “கடாரம் கொண்டான்" என்ற விருதுக்குச் சொந்தக்காரர் ஆனது. இலங்கை முழுவதையும் கைப்பற்றித் தனது ஆட்சியின்கீழ் கொண்டு வந்து, "முடிகொண்ட சோழன்” என்ற அடைமொழி பெற்றது. இந்தியாவின் மேற்கே அரபிக்கடலில் இருக்கும் மாலத்தீவு, லட்சத்தீவு ஆகியவற்றையும் தனது அதிகாரத்தின்கீழ் கொண்டு இவ்வாறு விரிந்து கொண்டே செல்கின்றது. அவரது வீரப் பிரதாபப் பட்டியல்!.
இப்படிப்பட்ட மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு உரிய புகழ் அங்கீகாரம், நமது பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தன்னிச்சையாக எழுதப்பட்ட ஒரு தலைப்பட்சமான கருத்துகள், ஆக்டோபஸ் போல வரலாற்றுப் பக்கங்களை ஆக்கிரமித்து ஆழமாக வேரூன்றிப் படர்ந்து கிடக்கின்றன.
Read Also: Freedom Is Our Birthright, சுந்திரம் எங்கள் பிறப்புரிமை
பெரும்பாலான வரலாற்றுப் பக்கங்களை உருவாக்கியவர்கள், கடந்தகால இந்தியா பற்றிய தகவல்களுக்கு மவுரியர்களின் ஆட்சியையே பிள்ளையார் சுழியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மவுரியர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அந்தக்கால மன்னர்கள் நிகழ்த்திய சரித்திரச் சாதனைகளின் விவரங்கள், எங்கோ ஒளித்து வைக்கப்பட்டு இருக்கின்றன.
உலகிற்கே மொழியையும் நாகரிகத்தையும் கற்றுக்கொடுத்த தமிழ் மண்ணில், வீரச் செறிவுடன் ஆட்சி செய்த பல்லவர்கள் சேர, சோழ, பாண்டிய வம்சங்களில் உதித்த மன்னர்களின் சாதனைகள், அதிக அளவில் புகழ் வெளிச்சம் பாய்ச்சப்படாமல் இருக்கின்றன. பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இதுதான் நிலை என்பதால், வருங்கால சந்ததியினருக்குத் தமிழ் மன்னர்களின் பழம் பெருமை புலப்படாமலேயே போய்விடும் ஆபத்து இருக்கிறது.

சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள், இமயத்தில் தங்கள் இலட்சினையைப் பொறித்த சேர மன்னர் இமயவரம்பன், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டிய சோழ மன்னர் கரிகாலன், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் மாமல்லபுரத்தில் குடைவரைக் கோவில்களை கட்டிய பல்லவ மன்னர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அசையாமல் நிற்கும் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய மன்னர் ராஜராஜன், உலகின் பெரும் பகுதியை ஆண்ட அவரது மகன் ராஜேந்திரன் போன்றவர்களைப் பற்றிய வரலாறுகளைகளைப் பாடப்புத்தகங்களில் ஒன்றிரண்டு வரிகளில் சுருக்கிவிட்டார்கள்.
இதனால் என்ன ஆனது? ஆதிகாலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்களில் சிறப்பிடம் பிடித்தவர்கள் யார்-யார் என்று கேட்டால், சந்திரகுப்த மவுரியர், அக்பர், அசோகர், பாபர், ஷாஜஹான், சிவாஜி பட்டியலை மாணவர்கள் மனப்பாடமாக ஒப்பிக்கிறார்கள். மவுரியர்கள், கல்தான்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் பிரஸ்தாபங்களே வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் படர்ந்து கிடப்பதுதான் இந்த அவல நிலைக்குக் காரணம்.

வரலாற்றுச் சாதனை மன்னர்களின் தரவரிசையில், முதல் இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர வேண்டிய மாபெரும் மன்னர் ராஜேந்திர சோழன் பற்றி பாடப் புத்தகங்கள் கண்டுகொள்ளாமல் முக்காடு போட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு இருக்கின்றன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட காலாட் படை வீரர்கள், ஒரு லட்சம் எண்ணிக்கைக்கும் அதிகமான குதிரைப் படையினர், 50 ஆயிரத்துக்கும் கூடுதலான யானைகள், ஆயிரக்கணக்கான போர்க்கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்ட பிரமாண்ட படையை உருவாக்கி இருந்தனர்.
உலகின் கால்வாசிப் பகுதியை கிடுகிடுக்க மன்னர் ராஜேந்திர சோழனின் வரலாறு ஆவணப் பக்கங்களில் முன்னெடுக்கப்படாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது ஏன் என்பது தெரியவில்லை. போர்களில் கிடைத்த வெற்றிகள் மட்டுமல்ல; நாட்டின் அரசியல் நிர்வாகம், நீர்மேலாண்மைத் திட்டங்கள், அயல்நாட்டு மன்னர்களுடன் நட்புறவு, கீழை மற்றும் மேல்திசை நாடுகளுடன் வாணிகம், கொடைத்தன்மை, ஆன்மிகம், கட்டடக்கலை, சிற்பம், இசை, நாட்டியம் உள்ளிட்ட அனைத்திலும் உச்சம் என்ற முத்திரையைப் பதித்தவரின் முழு வரலாறு, இன்றைய தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் உள்பட பலருக்குத் தெரியாமலேயே உள்ளது.

போற்றத்தக்க வகையிலும், மெய்சிலிர்க்கும் வண்ணமும் உள்ளவை, மன்னர் ராஜேந்திர சோழன் வரலாற்றுச் சம்பவங்கள். மன்னராக ஆவதற்கு முன்னரே, தந்தையுடன் பல போர்க்களங்களுக்குச் சென்று வெற்றி வாகை சூடியது வீரம் மிக்க வரலாறு. கங்கை நீரை தமிழகத்துக்குக் கொண்டு வந்து, தான் உருவாக்கிய தலைநகர், பிரமாண்ட கோவில், ஏரி ஆகியவற்றை கங்கை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பி அதனைச் சாதித்தது சாதனை வரலாறு.
அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி, தென்கிழக்கு ஆசிய நாடுகளை வென்று கடல் கடந்து வாணிபம் செய் தமிழக வணிகர்களுக்குப் பேருதவி செய்தது வியப்பான வாலாறு. அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு முடிவுரை எழுதியது அபாரமான வரலாறு. தான் காதலித்த பெண்னை மணக்க முடியவில்லை என்றபோது, அந்த அந்தஸ்தைக் கொடுத்து வாழ்நாள் முழுவதும் போற்றி மகிழ்ந்தது ருசிகரமான காதல் வரலாறு.
Read Also: அரசன் மற்றும் அறிவாளியான விவசாயின் கதை
மகன்களை மன்னர்களாக ஆக்கி அழகு பார்த்தது மகிழ்ச்சியான வரலாறு. தனது தாயாருக்கோ, தந்தைக்கோ கோவில் எழுப்பாமல், தனது சிற்றன்னையின் நினைவாக ஆலயம் கட்டியது வியப்பான வரலாறு. இறுதி நாட்களில் நாட்டை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டபோது மரணத்தைத் தழுவியது உருக்கமான வரலாறு. இவைபோன்ற சோழப் பேரரசர் ராஜேந்திர சோழன் தொடர்பான அனைத்து வாலாற்று விவரங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

வியப்பான வினோதம்

பெரிய கோவிலைப் போன்ற தோற்றத்தில் ஒரு கோவிலை, தான் உருவாக்கிய புதிய தலைநகரில் அமைக்க மன்னர் ராஜேந்திரன் தீர்மானித்தார். ஆனால் அவர் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சரம் கோவில் விமானத்தின் உயரம் 180 அடி. தனது தந்தையின் சாதனையை மிஞ்சக்கூடாது என்பதற்காகச் சற்று உயரம் குறைவான விமானத்தை ராஜேந்திரன் கட்டினார் என்று கூறுவார்கள்.

தஞ்சைப் பெரிய கோவில் விமானம் செங்குத்தாகக், கம்பீரமான ஓர் ஆணுக்கு உரிய தோற்றத்தில் காணப்படுகிறது. ராஜேந்திரன் கட்டிய கோவில் விமானம், நெளிவு சுழிவுகளுடன் ஒரு பெண்ணுக்கு உரிய நளினத்துடன் காட்சி அளிக்கிறது. தஞ்சைக் கோவிலின் ஆண் வடிவத் தோற்றத்திற்கு இணையாக, ஒரு பெண் வடிவத் தோற்றத்தில் கங்கை கொண்ட சோழீச்சரம் கோவில் விமானத்தை அமைக்கத் திட்டமிட்டு மன்னர் ராஜேந்திர சோழன் இவ்வாறு கட்டினாரா என்பது வினோதமாகப் பார்க்கப்படுகிறது. நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook