கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-3

இளவரசர் ஆனார் ராஜேந்திரன்

மன்னர் ராஜராஜனுக்கு 15 மனைவிகள் இருந்தனர். அவர்களில் லோகமாதேவி என்பவர் பட்டத்து ராணி, இவருக்கு, குந்தவை, மாதேவடிகள், கங்கமாதேவி ஆகிய மூன்று பெண் மக்கள் பிறந்தனர். ஆண் வாரிசு இல்லை. ராஜராஜனின் மற்ற மனைவிகளில் ஒருவர், சேரர் குலத்தைச் சேர்ந்த வானவன்மாதேவி என்ற திரிபுவனமாதேவி. (அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில், குந்தவையின் தோழி வானதி என்று குறிப்பிடப்பட்டு இருப்பவர் இவர்தான்) அவரது வயிற்றில் உதித்தவர்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
பிற்காலத்தில் ராஜேந்திர சோழன் என்று அறியப்பட்ட மதுராந்தகன். மன்னர் ராஜராஜன், தனது சிற்றப்பன் உத்தம சோழன் என்ற மதுராந்தகன் மீது நல்ல அபிமானம் கொண்டவர். சுந்தர சோழர் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ராஜராஜனே தஞ்சை மன்னராக அரியணை ஏற வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வற்புறுத்தியபோது, சிற்றப்பன் மதுராந்தகன், மன்னராக விரும்பியதால் ராஜராஜன், அவருக்கு அரியணையை விட்டுக் கொடுத்தார்.
மதுராந்தகனின் 15 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகே ராஜராஜன் தஞ்சையின் மன்னர் ஆனார். சிற்றப்பன் மீது கொண்டு இருந்த நல்ல எண்ணம் காரணமாகவும், ஏற்கனவே தனது முன்னோர்கள் வைத்து இருந்த பெயர் என்பதாலும் தனது மகனுக்கு, மதுராந்தகன் என்ற பெயரை ராஜராஜன் சூட்டினார்.

மதுராந்தகன் பிறந்த தினம் எது என்பது எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அவர், 'திருவாதிரை நட்சத்திரத்தன்று பிறந்தார்' என்பது மட்டும் பல கல்வெட்டுகளில் காணப்படுகிறது. எந்த மாதத்தில் வரும் திருவாதிரை என்பது குறிப்பிடப்படவில்லை. திருவொற்றியூர், விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகளை ஆதாரமாகக் காண்பித்து, 'மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திர நாளில் மதுராந்தகன் பிறந்தார்' என்று நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்தது.
சோழர்களின் வரலாற்று ஆசிரியர்களான கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் உள்படப் பலரும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தனர். இந்த இரண்டு ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகளில், மார்கழி மாதம் வருகின்ற திருவாதிரை நாளில் ராஜேந்திரன் பெயரில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ராஜேந்திரன் மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில் பிறந்தார் என்ற குறிப்பு அந்தக் கல்வெட்டுகளில் இல்லை.

ராஜேந்திரன் ஆடி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதை வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகமின்றி நிரூபித்தார். திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறையின் அதிட்டானத்து குமுதப்பட்டையில், மன்னர் ராஜேந்திரனின் சாசனம் ஒன்று கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அந்தச் சாசனத்தில் “நாம் பிறந்த ஆடித் திருவாதிரை...” என்ற வாசகத்தை மன்னர் ராஜேந்திரன் குறிப்பிட்டு இருக்கிறார். தனது தந்தை பிறந்த ஐப்பசி சதய நாளிலும், தான் பிறந்த ஆடி மாத திருவாதிரை நாளிலும் விழாக்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்தக் கல்வெட்டில் ராஜேந்திரன் விவரித்துள்ளார். இதன் மூலம் அவர் ஆடி மாதத்து திருவாதிரை நட்சத்திர நாளில் பிறந்தார் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil | Part-3
பிறந்தபோது மதுராந்தகன் என்று பெயரிடப்பட்டு, பின்னர் ராஜேந்திர சோழர் என்ற திருநாமத்துடன் ஆட்சிப் பீடம் ஏற இருப்பவர், தந்தை ராஜராஜனின் சாதனைகளை முறியடிக்கப் போகிறார் என்பதோ, வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று, வழியில் உள்ள நாடுகளின் மன்னர்களை வென்று கங்கை நீரை பொற் குடங்களில் தமிழகத்திற்குக் கொண்டு வரப்போகிறார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History in Tamil Part-2
என்பதோ, கொள்ளிடத்தின் வட கரையில் 'கங்கை கொண்ட சோழபுரம்' என்ற புதிய தலைநகரை நிர்மாணித்து, அங்கே தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற மாபெரும் கோவிலைக் கட்டப் போகிறார் என்பதோ, உலகமே வியக்கும் வண்ணம் அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி, கோவில் கீழ்த்திசை நாடுகளுக்குச் சென்று, அந்த நாடுகளையும் தனது குடையின் கீழ்க் கொண்டுவந்து, தமிழக வரலாற்றில் நீங்காப்புகழ் பெறப் போகிறார் என்பதோ தஞ்சை மக்களுக்கு அப்போது தெரிந்து இருக்க நியாயம் இல்லை.
இளம் வயதிலேயே மன்னர் ராஜராஜனுடன் பல போர்க்களங்களுக்குச் சென்று வெற்றிவாகை சூடிய மதுராந்தகன், எதிர்காலத்தில் மாபெரும் மன்னராகத் திகழ்வார் என்பதில் மட்டும் தஞ்சை மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அப்படிப்பட்ட மதுராந்தகன் இளவரசராக முடிசூட இருக்கும் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதை மக்கள் தங்கள் பாக்கியமாகக் கருதினார்கள் என்பதில் வியப்பு இல்லை.

அவர்களைப் போன்ற எண்ணத்துடன், சோழப் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் தங்கள் படை பரிவாரங்களுடன் வந்து தஞ்சையில் குவிந்திருந்தனர். இந்தச் சிறப்பான நிகழ்வு நடைபெற்ற ஆண்டு கி.பி.1012 மிகச் சரியாக எந்தத் தேதியில் மதுராந்தகனின் முடிசூட்டு விழா நடைபெற்றது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.
திருப்பாராய்த்துறை தாருகாவனேசுவரர் கோவிலில் உள்ள மன்னர் ராஜேந்திரனின் 5-ம் ஆட்சி ஆண்டு சாசனத்தில், அவர் இளவரசராகப் பதவி ஏற்றபோது காணப்பட்ட கிரக நிலைகள் குறிக்கப்பட்டுள்ளன. அந்தக் கிரக நிலைகளைக் கொண்டு ஆய்வு செய்த அறிஞர்கள், 1012-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதிக்கும், ஜூலை மாதம் 7-ந் தேதிக்கும் இடைப்பட்ட ஒரு நல்ல நாளில், மதுராந்தகன், தஞ்சைப் பேரரசின் பட்டத்து இளவரசராக முடிசூட்டப்பட்டு, ராஜேந்திரன் என்ற திருநாமத்தைப் பெற்று இருக்கலாம் என்று முடிவுசெய்து இருக்கிறார்கள்.

Read Also: அரசன் மற்றும் அறிவாளியான விவசாயின் கதை
பொதுவாக மன்னர்கள், தங்கள் காலத்திற்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றுவதில் வாரிசுப் போட்டி வந்துவிடக் கூடாது என்பதற்காக, தங்கள் மூத்த மகன் வாலிப வயது இருக்கும்போதே அவரை பட்டத்து இளவரசராக அறிவித்துவிடுவார்கள். மதுராந்தகனுக்கு வாரிசுப் போட்டி ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால் 50 வயதைக் கடந்துவிட்ட தருணத்தில் தான் மதுராந்தகனை பட்டத்து இளவரசராக அறிவிக்க மன்னர் ராஜராஜன் தீர்மானித்தார்.
மதுராந்தகன், போர் நுணுக்கங்களிலும் கல்வி, கேள்விகளிலும், நாடாளும் திறமையிலும், அயல்நாட்டு வணிகக் கோட்பாடுகளிலும் நன்கு அனுபவமும் தேர்ச்சியும் பெற வேண்டும் என்பதற்காகவே, அவரை பட்டத்து இளவரசராக அறிவிக்கும் நிகழ்ச்சிக்கு ராஜராஜன் காலம் தாழ்த்தி வந்தார். மதுராந்தகன், தஞ்சையின் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்காகத்தான் தஞ்சை நகர் தன்னை அலங்கரித்துக் கொண்டு இருந்தது.

ஒப்பற்ற இந்த விழாவுக்காக, ராஜராஜனின் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் மகிழ்ச்சியில் குதாகலித்துக் கொண்டு இருந்தன. மதுராந்தகனை பட்டத்து இளவரசராக அறிவிக்கும் நிகழ்வுக்காக, தஞ்சை அரண்மனை வளாகத்தில் சர்வ அலங்காரத்துடன் தற்காலிக மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் மன்னர் ராஜராஜனும் அவரது மனைவிகளும் குழுமி இருந்தார்கள்.
அமைச்சர்கள், சோழர்களின் படைத் தளபதிகளான விக்ரமவரைய சோழிய வரையன், கிருஷ்ணன் ராமன், மாராயன் அருள்மொழி ஈராயிரவன் உள்பட பல முக்கியபிரமுகர்களும், மதுராந்தகனுக்கு கல்வி கேள்விகளைக் கற்றுக் கொடுத்த பண்டிதர்களும் ஆர்வத்துடன் கூடி இருந்தார்கள். மன்னர் ராஜராஜனின் அக்காள் குந்தவை பிராட்டியார் தனது கணவர் வல்லவரையர் வந்தியத்தேவனுடன் வந்து இருந்தார்.

மேடையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்களை ஓதினார்கள். தஞ்சைப் பெரிய கோவிலின் ஒதுவார்கள், தமிழ்ப் பாசுரங்களைப் பாடி, பக்தி மணம் பரப்பினார்கள். ஜோதிடர்கள் குறிப்பிட்டுக் கொடுத்த சுப ஹோரையில், மதுராந்தகனை பட்டத்து இளவரசராக அறிவித்து மாணிக்கக் கற்களால் மின்னிய மணி முடியை அவரது தலையில் சூட்டினார்.
“மதுராந்தகன், இன்று முதல் ராஜேந்திரன் என்ற அபிஷேக நாமத்துடன் அழைக்கப்படுவார்" என்று அப்போது ராஜராஜன் அறிவித்தார். இதைக் கேட்டதும் கூடி இருந்த அனைவரும், 'இளவரசர் ராஜேந்திரன் நீடுழி வாழ்க" என்று உற்சாகத்துடன் வாழ்த்துக் கோஷம் எழுப்பினார்கள். அப்போது அரண்மனையில் இருந்த முரசுகள் ஒலிக்கப்பட்டன. வாத்தியங்கள் முழங்கின.

இவ்வளவு ஆரவாரங்கள் இருந்தபோதிலும் அவற்றில் முழுவதுமாக லயித்துவிடாமல், ராஜேந்திரனின் மனதில் வேறு ஓர் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. தனது தந்தைக்கு வயதாகிவிட்டது. அவரது காலத்திற்குள், அவர் மனதில் நீண்ட காலமாக உள்ள இரண்டு துயரங்களைக் களைய வேண்டியது தனது கடமை.
தந்தையின் இரண்டு கவலைகளையும் எவ்வாறு தீர்ப்பது?, அதற்கு எந்த வகையில் எதிரி நாட்டு மீது படையெடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிடுவதிலேயே அவர் மனம் மூழ்கி இருந்தது. அவர் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான சூட்சுமம், பல படையெடுப்புகளில் அவருக்குக் கிடைத்த மகத்தான வெற்றிகளின் அனுபவம் அடித்தளமாக அமைந்து இருந்தது.

Read Also: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

வியப்பான வினோதம்

மன்னர் ராஜராஜன், கலிங்கம் வரை சென்று வெற்றி பெற்ற நாடுகளின் விவரமும், அவரது மகன் ராஜேந்திரன் வடக்கே கங்கை வரை உள்ள நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றை வென்ற பட்டியலும் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த நாடுகளை வென்ற ராஜராஜனும், ராஜேந்திரனும், போர்கள் முடிந்த பின்னர், அந்த நாடுகள் எவற்றையும் தஞ்சைப் பேரரசின் எல்லைக்கு உட்பட்டப் பகுதிகளாக இணைத்ததாகத் தகவல் ஏதும் கல்வெட்டில் காணப்படவில்லை. இலங்கையிலும், ஒரு முறை பாண்டிய தேசத்திலும் மட்டும் ஆட்சி செய்த அவர்கள், வட நாடுகளைக் கைப்பற்றியபோது அந்த நாடுகளின் மீது நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தைச் செலுத்தும் வகையில், அங்கே தங்கள் பிரதிநிதிகள் யாரையும் நியமிக்கவும் இல்லை.

அந்த நாடுகள், தங்களுக்குக் கப்பம் செலுத்த வேண்டும் என்று கூறி, அவர்களிடம் கப்பம் வசூலித்ததாகவும் தகவல் இல்லை. வெற்றி பெற்ற அந்த நாடுகளில் இருந்து, நினைவுச் சின்னங்களையும், அங்கு இருந்த ஏராளமான செல்வங்களையும் இங்கே எடுத்து வந்தார்கள் என்ற தகவல் மட்டுமே வரலாற்றில் காணப்படுவது வினோதமாகப் பார்க்கப்படுகிறது. நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!.

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook