கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-7

வரலாற்றைக் குழப்பிய காந்தளூர்ச்சாலைப் போர்

மன்னர் ராஜராஜனின் வரலாற்றில், காந்தளூர்ச்சாலைப் போர் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே அவரது மெய்க்கீர்த்தியில், “காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளிய..." என்ற வாசகம் பெருமையுடன் இடம் பெற்று இருக்கிறது. இந்தப் போரின்போது சோழப்படைக்குத் தளபதியாகச் சென்றவர் ராஜேந்திரன் என்பதால், காந்தளூர்ச்சாலைப் போர் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
காந்தளூர்ச்சாலைப் போர் குறித்து கல்வெட்டுகளிலோ, செப்பேடுகளிலோ விவரமான தகவல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது பெரிய குறை. காந்தளூர்ச்சாலை என்ற இடம் எங்கே இருக்கிறது?, அங்கே இருந்தது கல்விச்சாலையா?, போர்ப் பயிற்சிக்கூடமா?, உயிர்ச்சேதம் விளைவிக்கும் வகையில் போர் நடைபெற்றதா?, அப்படியென்றால் எதற்காக ராஜராஜனும், ராஜேந்திரனும் அங்கே தாக்குதல் நடத்தினார்கள்? ஆகிய கேள்விகளுக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை.
“கந்தளூர்ச்சாலை கலமறுத் தருளிய” என்ற சொற்றொடர், இன்றளவும் முழுமையாகப் பொருள் புரிந்து கொள்ளப்படாமல், வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுக்கு இடமாகியுள்ளது. காந்தளூர்ச்சாலை என்ற பெயரில் பல ஊர்கள் இருந்தபோதிலும், திருவனந்தபுரம் நகருக்குத் தெற்கே 10 மைல் தொலைவில் உள்ள 'வலிய சாலை' என்ற இடம்தான் போர் நடைபெற்ற ‘காந்தளூர்ச்சாலை' என்ற கருத்தில் பலர் உடன்படுகிறார்கள். (அங்கு இப்போது மகாதேவர் என்ற கோவில் உள்ளது).

அங்கே நம்பூதிரிகளைக் கொண்டு பலருக்குக் கல்வி கற்றுக் கொடுத்ததோடு, போர்க் கலை, போரின் நுட்பம், வியூகம், தனுர்வேதம், களறிப் பயிற்சி, வர்மம், ராஜாங்க நிர்வாகம் ஆகியவையும் சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உள்ளிட்ட சில ஆய்வாளர்கள், 'காந்தளூர்ச்சாலை என்பது ஆயுதப் பயிற்சிப் பட்டறை அல்ல. அது மாணவர்களின் உண்டு உறைவிடப் பள்ளி' என்று கூறியுள்ளனர். காரணம், அந்தக் காலத்தில் 'சாலை' என்பது 'பள்ளிக்கூடம்’ என்பதை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. காந்தளூர்ச்சாலை, சேரர்களின் கப்பல் படைத் தளமாக இருந்தது என்பது சிலரது கருத்து.
அங்கு இருந்த சேரர்களின் போர்க் கப்பல்களை ராஜராஜன் அழித்து சேதப்படுத்தினார் என்று இவர்கள் கூறுகிறார்கள். செப்பேடு வாசகத்தில் காணப்படும் “கலமறுத் தருளிய” என்ற சொற்றொடரில் “அருளிய" என்ற சொல் உள்ளதால், அங்கு கடும் தாக்குதல் நடத்தப் படவில்லை: தனது தலைமைத் தன்மையை நிலைநாட்டுவதற்காக அங்கே ராஜராஜன், மகன் ராஜேந்திரனுடன் படையெடுத்துச் சென்று, அந்தச் சாலையில் இருந்த முரண்பாடுகளை நீக்கி சரி செய்து அருளினார் என்று மேலும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

‘கலன்’ என்ற சொல் அந்தக்காலத்தில், 'வில்லங்கம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. சொத்து ஆவணத்தை ஒலைச் சுவடிகளில் எழுதியபோது, 'வில்லங்கம் இல்லை' என்பதை "யாதொரு கலனும் இல்லை’ என்று குறிப்பிட்டார்கள். 'அறுத்து' என்பது 'வரையறுத்து' என்பதைக் குறிக்கலாம். எனவே “கலமறுத்து” என்றால், “வில்லங்கம் நீக்கி” என்று ஆகிறது. நல்வழிப்படுத்திக் கொடுத்ததால், “அருளி” என்ற சொல் மெய்க்கீர்த்தியில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
ஆனால் இவற்றில் எந்தக் கருத்தையும் நிரூபிக்க ஆதாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் தொல்லியல் ஆய்வாளர் சி.இளங்கோ, தமிழகத்தில் உள்ள நடுகற்கள் தொடர்பாக ஆய்வு நடத்தியபோது, செங்கம் ஏரிக்கரையில் ஒரு நடுகல்லைக் கண்டுபிடித்தார். அந்த நடுகல்லில் இடம்பெற்ற ராஜராஜனின் மெய்க்கீர்த்தியில், “ஸ்வஸ்திஸ்ரீ தண்டேவிச் சாலைய் கலமறுத்து அங்குள்ள மலைஆளர் தலை அறுத்து...” என்ற வாசகம் காணப்படுகிறது. அதாவது, “மலைஆளர் தலை அறுத்து” என்ற சொற்றொடர் அந்த மெய்க்கீர்த்தியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம், ‘காந்தளூர்ச்சாலைப் போரின் போது சேர நாடான மலையாள தேசத்தினர் பலரது தலைகள் அறுக்கப்பட்டடன` என்பதும், தலை அறுக்கப் பட்டதால் அவர்கள் போர் வீரர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதும், போர்ப் பயிற்சிக்கூடம் என்பதால்தான் அங்கே கடுமையான தாக்குதல் நடந்தது என்பதும் ஒரு கருத்தாக முன்வைக்கப்படுகிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்ற பாண்டியர்களின் ஆபத்துதவிகள், காந்தளூர்ச்சாலையில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அறிந்த ராஜராஜன், அந்தப் பயிற்சிக்கூடத்தையும், அங்கு இருந்த கப்பல் படையையும் அழித்தார் என்று பல ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்தும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது.
ராஜராஜனுக்குப் பின் வந்தவர்களும், பாண்டிய மன்னர்களும் காந்தளுர்ச்சாலையில் கலமறுத்ததாகத் தங்கள் மெய்க்கீர்த்தி அல்லது செப்பேடுகளில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே அந்தக் கலாசாலையில் மீண்டும், மீண்டும் தவறு நடைபெற்று இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.

8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆய்குல வேந்தன் கருநன் தடக்கன் என்பவன் செப்பேட்டில், காந்தளுர்ச்சாலை போலவே பார்த்திவசேகரபுரம் என்ற இடத்தில், ஒரு சாலை இருந்ததாகவும் அதில் சேர்ந்து பயில விரும்புகிறவர்கள் சேர, சோழ, பாண்டியரின் ஆட்சியில் பங்குகொள்ளும் பயிற்சியும், அறிவும் பெற்று இருக்க வேண்டும்.

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil | Part-7
படைகளைத் தாக்கும் தகுதியும் பெற்று இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டு இருக்கிறது. அதே போன்ற சாலை என்பதால் காந்தளூர்ச்சாலையிலும் இருந்தவர்கள் போர்ப் பயிற்சி பெற்ற வீரர்களாகவே இருக்கலாம் என்று கருதப்பட்டனர். இவ்வாறான அனைத்துக் கருத்துகளையும் ஆராயும்போது, “காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளிய” என்பதைக் கீழ்க்கண்டவாறு பொருள் புரிந்து கொள்ளலாம்.
காந்தளூர்ச்சாலை என்பது திருவனந்தபுரம் அருகே இருந்த துறைமுக நகரம். அங்கு இருந்தது - கல்விச்சாலையுடன் கூடிய பயிற்சி நிலையம். அங்கு மாணவர்களுக்கு வேதப் பாடங்களுடன் ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அங்கு போர்ப் பயிற்சி பெற்றவர்கள்தான் தனது அண்ணன் ராஜராஜ சோழன் கரிகாலனின் கொலைக்குக் காரணமானவர்கள் என்பதை மன்னர் அறிந்து இருந்தார். இவ்வாறு வில்லங்கமாகச் செயல்பட்ட கலாசாலையை ராஜராஜன், படையெடுப்பு மூலம் சரி செய்து கொடுத்தார். அப்போது நடைபெற்ற போரின்போது, அந்தக் கலாசாலையில் இருந்த மலைதேச மக்கள் பலரது தலைகள் அறுக்கப்பட்டன. இதுதான் காந்தளூர்ச்சாலைப் போர் என்று ஒருவாறு யூகிக்கலாம்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
காந்தளூர்ச்சாலைப் போருக்குப் பின்னர் சோழப் படைகள், உதகை என்ற இடத்திற்குச் சென்றன. மன்னர் ராஜராஜன் அனுப்பிய தூதரைக் கைது செய்த சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மன், அங்குதான் அந்தத் தூதரை சிறை வைத்து இருந்தார். ராஜேந்திரன் தலைமையில் உதகைக்குச் சென்ற சோழப் படைகளால் அந்த நகரம் அழிக்கப்பட்டது. சிறைச்சாலை உடைக்கப்பட்டது. அங்கே சிறை வைக்கப்பட்டு இருந்த சோழ மன்னர் ராஜராஜனின் தூதர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அதன் பிறகு சோழப்படைகள், சேர நாட்டின் தென் கடற்கோடியில், திருவனந்தபுரத்திற்கு 10 மைல் தொலைவில் உள்ள விழிஞ்சம் என்ற துறைமுக நகரையும் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டில் கிடைத்த இந்த வெற்றிகளை ஈட்டித் தந்தவர், ராஜராஜனின் மகன் மதுராந்தகன் (ராஜேந்திரன்) என்பது கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தங்களது எதிரிகளான பாண்டியர் மற்றும் சேரர்களுக்கு உதவி செய்யும் இலங்கையை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக, ராஜராஜன் தனது இரண்டாம் படையெடுப்பாக இலங்கை மீது போர் தொடுத்தார். இந்தப் போருக்கும் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஐந்தாம் மகிந்தன் என்பவர், கி.பி.981-ம் ஆண்டு இலங்கை மன்னராக ஆட்சிப் பீடம் ஏறினார். இவர் தனது முன்னோர் போலவே, அவ்வப்போது சோழர்களுக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
இதனால், இலங்கையை வென்று, தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவர வேண்டும் என்று மன்னர் ராஜராஜன் தீர்மானித்தார். இதனைச் செய்து முடிப்பதற்காக சோழப் படைகள், கடல் கடந்து இலங்கைக்குச் சென்றன. ராஜேந்திரன் தலைமையிலான சோழப் படைகள் இலங்கைக்குச் சென்ற நேரத்தில், அந்த நாட்டில் படைத் தளபதிகளுக்கு இடையே கலகம் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலை உருவாகி இருந்தது.

இந்த இக்கட்டான நிலையில் சோழர்களின் படையும் வந்துவிட்டதால், உயிர் தப்புவதற்காக இலங்கை மன்னர் மகிந்தன், அந்த நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ரோகணா என்ற இடத்திற்குச் சென்றுவிட்டார். எதிர்ப்பே இல்லாததால் சோழப் படைகள், இலங்கையின் வட பகுதியான ஈழம் முழுவதையும் எளிதாகக் கைப்பற்றிக் கொண்டன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
அந்தப் பகுதி “மும்முடிச் சோழமண்டலம்” என்று பெயரிடப்பட்டு, ராஜராஜனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாகத் தலைநகரமாக இருந்த அனுராதபுரம் நகரை சோழப் படைகள் அழித்து, ராணுவக் கேந்திரமாக இருந்த பொலன்னருவா நகரத்தைப் புதிய தலைநகரமாக ஆக்கினார்கள்.
அந்த நகரம், ‘ஜனனாதமங்கலம்' என்று பெயரிடப்பட்டு, அங்கே சிவன் கோவில் ஒன்றைக் கட்டவும் மன்னர் ராஜராஜன் ஏற்பாடு செய்தார். இலங்கை மீது நடைபெற்ற போருக்குப் பிறகு, சேரநாட்டின் மீது மீண்டும் போர் தொடுக்க வேண்டிய கட்டாயம் மன்னர் ராஜராஜனுக்கு ஏற்பட்டது.

வியப்பான வினோதம்

பிற்கால சோழப் பேரரசுக்குப் புத்துயிர் ஊட்டிய மன்னர் விஜயாலன், கி.பி. 850-ம் ஆண்டு தஞ்சையைக் கைப்பற்றி, அந்த சோழர்களின் தலைநகர் ஆக்கினார். அவருக்குப் பின் மன்னர் ராஜராஜன் காலம் வரை சோழ மன்னர்கள் 178 ஆண்டுகளாகத் தஞ்சையையே தலைநகராகப் பயன்படுத்தினார்கள். 1023-ம் ஆண்டு, மன்னர் ராஜேந்திர சோழன், புதிய தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். அவருக்குப் பின்னர் 14 தலைமுறை மன்னர்கள் ஆட்சி செய்தார்கள்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
அதுவும் 256 ஆண்டுகளாக கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். பிற்கால சோழர்களின் புகழ் எழுச்சிக்குக் காரணமாக கங்கை கொண்ட சோழபுரம் விளங்கியதே இவ்வளவு நீண்டகால ஆட்சிக்குக் காரணம். 1279-ம் ஆண்டு, பாண்டியர்கள் படையெடுப்பால் கங்கை கொண்ட சோழபுரம் நகரமும், சோழ வம்சமும் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டன. புகழ் எழுச்சியைக் கொடுத்த அதே தலைநகர்தான், சோழ வம்சத்தின் இறுதி வீழ்ச்சிக்குத் தளமாகவும் அமைந்துவிட்டது வினோதமாக உள்ளது. நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook