நேர மேலான்மையை நிர்வகிக்க வழிமுறைகள்
இன்றைய தலைமுறையினரிடம் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருக்கிறது. தாங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக கடினமாக உழைக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். அதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். நேரத்தை சரியாக நிர்வகிக்கும் திறன்களை வளர்த்துக் கொண்டால் அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் மீண்டு விடலாம். நேர மேலாண்மையை நிர்வகிக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
போட்டி நிறைந்த உலகில் இருப்பதால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். மனரீதியாக வலிமையோடு இருந்தால் மட்டுமே பிரச்சினைகளை எளிதாக கையாளவும், சுலபமாகவும் முடிக்கவும் முடியும். எந்தவொரு சூழலிலும் மனம் தளர்ந்து போய்விடக் கூடாது. மனா வலிமைதான் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற எண்ணத்தையும், நம்பிக்கையையும் உருவாக்கும். எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்பும் முன்னுரிமை பட்டியலை தயாரிக்க வேண்டும். பின்பு அதன்படி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வேலையை முடித்து விட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். அப்போது தான் நேர மேலாண்மையை பின்பற்ற முடியும்.
நீண்ட கால திட்டமிடலை மேற்கொண்டு, அதனை பின்பற்றுவதற்கு அட்டவணையையும் நிர்வகிக்க வேண்டும். ஒரே பணியை தொடர்ந்து செய்வதற்கு இடம் அளிக்கக் கூடாது. அது உற்சாகத்தையும், உடல் ஆற்றலையும் குறைத்துவிடும். நீண்ட கால திட்டமிடல்களை மேற்கொள்ளும் போது ஒவ்வொரு நாளும் இலக்கில் கவனம் செலுத்துவதோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு நேரத்தை சரியாக நிர்வகிக்க பழகிக்கொள்ள வேண்டும். இலக்கை துரத்தி பிடிப்பதற்கு இடைஇடையே குறுகிய கால இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். அது உற்சாகம் குறையாமல் இலக்கை அடைவதற்கு வித்திடும்.
கடின உழைப்பு மற்றும் அர்பணிப்புக்கு இணையானது வேற ஏதும் இல்லை. தேவையான அளவுக்கு முயற்சியையும், அர்ப்பணிப்பையும் கடைபிடித்தால் விரும்பும் எதையும் சாதிக்கலாம். இருப்பினும் கடின உழைப்பை சரியான திட்டமிடுதலுடன் மேற்கொள்ளும்போது ஆச்சரியங்களையும், ஆனந்தத்தையும் அனுபவிக்கலாம். பல்வேறு செயல்பாடுகளுக்கு இடையே நேரத்தை சமமாக பகிர்ந்தளிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
எத்தகைய செயலில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுக்க மறந்துவிடக்கூடாது. சிறிது நேர இடைவெளியும், அதன் மூலம் கிடைக்கும் ஓய்வும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இலக்கை நோக்கிய பயணத்தின் போது ஒவ்வொரு நாளும் அதற்காக செலவிடும் நேரத்தை கணக்கிட வேண்டும். மறுநாள் அதைவிட துரிதமாக செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும். நேரத்தை சரியாக நிர்வகிக்க பழகிக்கொள்வதன் மூலம் பிற அன்றாட செயல்பாடுகளுக்கு பாதிப்பு நேராமல் பார்த்துக்கொள்ளலாம். குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் சூழலையும் உருவாக்கிக்கொள்ளலாம்.
அனுபவமிக்கவர்கள், வயதில் மூத்தவர்களுடன் நட்பை பேணுவதும் அவசியமானது. ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது அவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக அமையும். பெற்றோரின் உதவியையும் நாடலாம். அவர்களின் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவும். Timer பயன்படுத்தினால் நேரத்தை பற்றிய புரிதலை எளிதாக உணர்ந்து கொள்ளலாம். அதை உங்கள் நண்பராக்குங்கள். ஒரு செயலை செய்வதற்குள் எவ்வளவு நேரம் ஓடோடி விடுகிறது என்பதை அளவிடுவீர்கள். இன்னும் விரைவாக செய்து முடிப்பதற்கு முயற்சிப்பீர்கள். நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதன் மூலம், எதிர்காலம் பற்றி சிந்திக்கவும் புதிய வியூகங்களை வகுக்கவும் முடியும்.
நம்முடைய வாழ்க்கைப் பயணம் என்பது நாம் அடைய வேண்டிய இலக்குகள் மட்டுமே நிறைந்தது அல்ல. நம்முடைய சுய அறிவு, கல்வி அறிவு, அனுபவ அறிவு, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நாம் சந்தித்த மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் போன்றவற்றை எல்லாமும் உள்ளடக்கியது தான். இந்த வாழ்க்கைப் பயணத்தின் வழியில் ஒருவேளை எதிர்பாராத விஷயங்கள் நடக்கலாம்.
தீர்வு காண முடியாதது போல பிரச்சினைகள் வரக் கூடலாம். இந்த பிரச்சினைகள் பொருளாதார நெருக்கடி, உறவுமுறை சிக்கல், உடல்நலம் பாதிப்பு, காலநிலை மாற்றம் அல்லது வேறு எதாவது பிரச்சினைகள் நிகழக்கூடும். இவற்றை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் இருந்தால் அது நம் நிலைமையை புரட்டிப்போட்டு விடக்கூடும். என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிலைகுலைந்து நின்று விடக்கூடும். இந்த மாதிரி நிலைமையை கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். நெருக்கடி நிலையை கையாள Crisis மேனேஜ்மென்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.
ஒரு நிறுவனத்தில் பணி புரியும் போது ஒருவர் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக அவர்கள் கொடுக்கும் வேலையானது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்குமானால், கண்டிப்பாக அதற்கு ‘NO’ சொல்ல பழகிக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் ‘YES’ சொல்லாதீர்கள். இதை பலர் புரிந்து கொள்வதில்லை. அதை சுயநலம் என்று நினைக்கிறார்கள். அது சுயநலமாக இருக்காது. பதிலாக இது உங்கள் வாழ்க்கையை நிர்வகிக்க உதவும்.
நேரத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் ஒவ்வொரு வேலைக்கும் கால அட்டவணை (Time Table) வகுத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து தவறாதீர்கள். குறைந்தபட்சம் Basic Time ஒழுக்கத்தை பின்பற்று போது எதிர்பாராமல் ஏற்படுகின்ற சில நேர நெருக்கடிகளை சமாளித்து செயல்பட முடியும். ஒரு வேலையை பகிர்ந்து செய்வதின் மூலம் நேரத்தை மிச்சப் படுத்த முடியும். எளிமையான வேலைகளை மற்றவர்களை செய்ய வைப்பதன் மூலம் அவர்களுக்கும் பயிற்சி (Practice) அளிப்பது போல் இருக்கும். அதேவேளையில் உங்களின் வேலையையும் குறைத்துக் கொள்ளலாம். இதனால் தேவையில்லாத மன அழுத்தத்தை Stress தவிர்க்க முடியும். அதிக வேலைப்பளு இருக்கும்போது, சிறிது நேரம் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியே சென்று வரலாம். இந்த இடைவெளி சோர்வான உங்கள் மூளையை தெளிவாக்கவும், வேலை நெருக்கடிக்கு நடுவில் உங்களின் ஆற்றலை புதுப்பிக்கவும் உதவியாக இருக்கும்.
நெருக்கடியான சமயங்களில் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சந்தித்து அவர்களிடம் பேசி கருத்துக்களை கேட்டறிதல் வேண்டும். இது பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கான வழிகளை கண்டறிய உதவும். மேலும் பிரச்சினையின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவும். எந்த பிரச்சினை வந்தாலும் உங்கள் குடும்பத்தினரிடமும் மற்றும் நண்பர்களிடம் மிகுந்த கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு சின்னச்சின்ன செயல்களும் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாய் இருக்கும். எந்த நிலைமை வந்தாலும் ஏற்றுக் கொண்டு செயல்பட தயாராக இருக்க வேண்டும்.
எத்தனை தோல்விகள் வந்தால் என்ன?. நீங்கள் ஒருபோதும் தீய பழக்கங்களுக்கு அடிமையாய் போய் விடக்கூடாது. தீய பழக்கங்கள் தற்காலிக சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால் அதற்கு நிரந்த அடிமையாகி, பின்நாளில் அதுவே வாழ்நாள் போராட்டமாக மாறிவிடும். சரியான நேரத்தில் சாப்பிட்டு, உறங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் உடற்பயிற்சி அல்லது யோகா செய்து உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி முடிந்தவரை மகிழ்ச்சியாக வாழலாம்.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.