The Story About Humanity In Tamil | மனித நேய மாண்பு கட்டுரை | ThaenMittai Stories

சிங்கத்தின் மனித நேயம்

ஒரு ஒரு இராமு என்ற ஏழைச் சிறுவன் இருந்தான். அவனது குடும்பம் விறகு வெட்டும் தொழிலை செய்து வந்தது. அதில் போதிய வருமானம் கிடைக்காததால் வெளியில் கடன் வாங்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் வாங்கிய கடன் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது.
இதையடுத்து சிறுவன் காட்டுக்கு சென்று விறகு வெட்டி, அதை விற்று பணம் சம்பாதித்து, வாங்கிய கடனை அடைக்க முடிவு செய்தான். கோடாரியை தூக்கிக்கொண்டு காட்டுக்கு சென்றான். அங்கு அவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அங்கிருந்த பெரும்பாலான மரங்களை ஏற்கனவே வெட்டிவிட்டதால், அந்த காடானது வெறுமனே காட்சியளித்தது. வேறுவழியின்றி சோகத்துடன் வீடு திரும்பினான் ராமு. கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகமானது. பக்கத்து ஊருக்குச் சென்று தனக்குத் தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுப் பார்த்தான்.

ஆனால் அவர்கள் யாருமே அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அவன் சோகத்துடன் திரும்பி வரும் வழியில் ஒரு காட்டைப் பார்த்தான். அது ஆபத்தான காடு என்பதை அறியாமல் அங்கு சென்றான். ஏராளமான மரங்கள் அங்கே இருந்தன. அங்குள்ள மரங்களை வெட்டி விற்றால் நிறைய சம்பாதிக்கலாம். கடன்களை தனது என்று எல்லாம் அடைத்துவிடலாம் முடிவு செய்தான். மேலும், ஏராளமான ஒடிந்த மரக்கட்டைகளும் அங்கே நிறைய கிடந்தன.
அவ்வாறு கிடந்த மரக்கட்டைகளை அவன் சேகரிக்க ஆரம்பித்தபோது ஒரு மிருகத்தின் கர்ஜனை சத்தம் கேட்டது. உடனே விறகு பொறுக்குவதை நிறுத்திவிட்டு, பயத்துடன் திரும்பி பார்த்தான். அவனை நோக்கி, ஒரு சிங்கம் கம்பீரமாக வந்து கொண்டு இருந்தது. இதைப் பார்த்த ராமு அதிர்ச்சியில் உறைந்தான். சிங்கத்தின் கண்களில் பசி வெறி தெரிந்தது. அது ராமுவைப் பார்த்தவுடன், பசி வெறியில் நாக்கை சுழற்றியது.

ராமு பயத்துடன் சிங்கத்திடம், "சிங்கராஜா, விட்டுவிடு, நான் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. எங்க குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது. கடன் தொல்லையிலும் கஷ்டப்படுகிறது. விறகு வெட்டி விற்று எப்படியாவது நான் கடனை அடைத்து விடுவேன். அதன் பின்னர் நான் உனக்கு விருந்தாக வருகிறேன், இது சத்தியம்!” என்று கெஞ்சினான்.
சிங்கமும் சிறிது நேரம் யோசித்தது. ஒருவனுடைய கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாமல் வேட்டையாடுவது பாவத்திற்குச் சமம். நம்முடைய ஒருநாள் பசியைத் தீர்ப்பதை விட, ஒரு குடும்பத்தின் பல நாள் பசியைப் போக்குவதே சிறந்தது என்று எண்ணியது. அதனால் மனமிறங்கி நம்பிக்கையுடன் அவனை அனுப்பி வைத்தது. சில நாட்களுக்குப் பின், கடனை அடைத்து விட்டு சிங்கத்திடம் வந்தான் ராமு.

"சிங்கராஜா, என்னை உனக்கு இரையாக்கிக் கொள்!" என்றான். உடனே சிங்கம், "நான் அந்த பாவத்தை செய்ய மாட்டேன்” என்றது. ராமு, ஏன் என்று கேட்டான். மனிதர்கள்தான் உன் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நானும் அப்படி இருக்க மாட்டேன் என்ற சிங்கம், “உன்னுடைய நேர்மைக்கு நான் தலை வணங்குகிறேன். நீ போய் உன் குடும்பத்துடன் சந்தோஷமாக இரு!' என்று வாழ்த்தி அவனை அனுப்பி வைத்தது. கருத்து: ஆறறிவு பெற்ற மனிதர்களிடம் கூட இல்லாத மனிதாபிமானம் ஐந்தறிவுடைய சிங்கத்திடம் இருப்பதையே இக்கதை நமக்கு உணர்த்துகிறது.
மனித நேய மாண்பு கட்டுரை, Humanity | ThaenMittai Stories
இந்த உலகில் எவரும் தனியாக யாரும் வாழ முடியாது. ஒருவருக்கொருவர் உதவி செய்து மனித நேயத்துடன் இருந்தால் தான் இந்த உலகத்தில் வாழ முடியும் . மனிதன் என்பது வெறும் வார்த்தை அல்ல. இந்த இயற்கையின் மிகப்பெரிய படைப்பு. மனிதநேயம் என்றாலே நம் மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது அன்னை தெரசா, ஹெலன் கெல்லர், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் தான்.
பல்லாயிரம் ஆண்டுகளாக மனித நேய மாண்பை கடைபிடித்து வாழ்ந்து வந்த புனிதர்கள் நிறைந்த புண்ணிய தேசம் நமது பூமி. உயர்வான ஒழுக்கம், உன்னதமான பண்பாடு, ஆன்ம நேயம், அவலக்குரல் கேட்டால் துடித்து எழும் மனித நேயம், அத்தனை நற்பண்புகளோடும் உலகம் வியக்கும் வாழ்க்கை வாழ்ந்து மனித குலம் செழிக்க வழிகாட்டினார்கள் நம் முன்னோர்கள். ஈ, எறும்பு, புழு, பூச்சி, வண்டுகள், பறவைகள், விலங்குகள் கூட துன்பப்படக் கூடாது என்ற எண்ணம் அவர்களது மனதில் மேலோங்கி இருந்தது.

சங்க காலத்தில் கடையெழு வள்ளல்கள் அவர்களின் கொடைமடைச் செயலினால், மனித நேயத்தின் சிகரங்களாக அறியப்பட்டு புகழ்ந்தார்கள். குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்கு இரக்கமுற்று தன்னுடைய போர்வையைக் கொடுத்தான் வள்ளல் பேகன். வாடிய முல்லைக் கொடி படர தன்னுடைய தேரினை ஈந்தான் வள்ளல் பாரி. வலிமை மிக்க குதிரைகளை இரவலர்களுக்கு கொடையாக வழங்கினான் வள்ளல் காரி. ஒளிமிகு நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்களுக்கு கொடுத்தான் வள்ளல் ஆய்.
நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்கும் அமிர்தமான நெல்லிக்கனியை தான் உண்ணாமல் தன்னுடைய புலவர் நீண்ட நாள் வாழ்ந்தால் தமிழ் சிறப்புறும் என சிந்தித்து, அதை அவ்வையாருக்கு கொடுத்தான் வள்ளல் அதியமான். பசியோடு வாடி வந்த இரவலர்களுக்கு வேண்டிய பொருள் வழங்கி, மன நிறைவு கண்டு மகிழ்ந்தான் வள்ளல் நள்ளி.

கூத்தாடுபவர்களுக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்ந்தான் வள்ளல் ஓரி. இந்திரர் அமிர்தம் கிடைத்தாலும் அது இனிமையானது என தனித்து உண்ணாத தகைமையாளர்களாலும், தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கின்ற சான்றோர்களாலும் தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என நமது முன்னோர்களின் மனித நேயம் குறித்துக் கூறுகின்றது புறநானூறு நூல்.
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றார் கனியன் பூங்குன்றனார். இவரின் மனித நேயம் வரிகள் என்பது எல்லைகள் தாண்டிய மனித நேயம் ஆகும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார். சமநிலை சமுதாயத்தை வலியுறுத்தி பாடினார் பாரதியார். “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ” என பாடுகிறார். தன்னைத் தாக்கும் பகைவர்களுக்கு கூட இம்சை செய்யாதிருப்பதை தனது போராட்ட வழியாக நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டவர் நம் தேசப்பிதா மாமனிதர் மகாத்மா காந்தி.

இந்த உலகில் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்களுக்கு தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பு செலுத்த இயலும் என்கிறார் தனது வாழ்நாள் முழு அர்ப்பணித்த அன்னை தெரசா. மனிதநேயத்தின் அவசியத்தை நமது மதங்களும் வலியுறுத்துகின்றன.
இன்றைய மனிதனின் மனித நேயத்தின் நிலை என்ன. மனிதனை மனிதன் மதிப்பதுமில்லை. அரவணைப்பதுமில்லை. மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவதுமில்லை. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து, உயர்ந்தவன், தாழ்ந்தவன் பாகுபாடு மறந்து, விருப்பு வெறுப்பற்று, ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற மனித நேய சிந்தனையோடு பவனிக்கும் மனிதர்களை இன்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook