பதப்படுத்தப்பட்ட உணவு உருவான கதை
இந்த உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை, உணவு உண்பது அவசியமானது ஆகும். மேலும் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக விளங்குகிறது. இந்த உணவானது, அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான உணவாக கிடைப்பதில்லை. அந்தந்த நாட்டின் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு கிடைக்கிறது. மேலும் அந்தந்த நிலத்திற்கு ஏற்றவாறு விளையும் உணவின் பயன்பாடு மாறுபடுகின்றது. இன்றையக் காலத்தில் பரவலாக அனைத்து நாட்டு உணவுகளும் கிடைக்கப்பெற்றாலும், அனைவரும் விரும்பி உண்பது என்பது அவரவர் நாட்டு உணவே என்பது நிதர்சன உண்மை!
மனித வாழ்வின் தொடக்கக் காலத்தில் மனித சமுதாயம் என்பது வேட்டையாடும் சமுதாயமாகவே இருந்துள்ளது. அதனால் தான் ஆதி மனிதர்கள் உணவினை வேட்டையாடியும், காடுகளில் கிடைத்த பழங்கள், விதைகள், கிழங்குகள் போன்றவற்றை உண்டும் காலத்தைப் போக்கினர். மனிதன் ஆரம்பத்தில் பச்சையாக மாமிச உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தான். நாளடைவில் இயற்கையாகக் காடுகளில் ஏற்பட்ட நெருப்பில் எரிந்த மாமிசம், கிழங்குகள் போன்றவற்றை சாப்பிடும் போது அதன் சுவை மேலும் கூடியிருப்பதை உணர்ந்து கொண்டான்.
மனிதன் நெருப்பு உருவாக்குவதை கண்டிபிடித்தான். சிக்கி முக்கி கற்களை உரசி நெருப்பை பற்ற வைத்து பழகி கொண்டான். அதன் பின் வேட்டையாடி கிட்டும் மாமிசம் மற்றும் இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களான விதைகள், கிழங்கு போன்றவற்றை தீயில் சுட்டும், வாட்டியும் உண்டான். அதன் பின் மண் பாத்திரங்கள் உருவாக்குவதை கண்டறிந்தான். அந்த மண்பாத்திரங்களில் உணவினை கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என அடுத்தடுத்த நிலைக்கு கொண்டுச் சென்றான்.
இந்த மாதிரி உணவானது பசியை மட்டும் போக்குவதற்கானது மட்டுமல்லாமல் நாம் உடல் இயக்கத்திற்கு தேவையான அறிவையும் ஆற்றலையும் தரவல்லது என்பதையும் உணர்ந்து கொண்டான். இதனால் கிடைத்த உணவினை பல வகையாக சமைக்க கற்றுக் கொண்டான். உணவுப் பொருட்கள் கிடைக்காத பருவ காலங்களில் அதனைப் பாதுகாத்து சேமிப்பது, பதப்படுத்துவது எனப் பலவாறு தன்னை தயார்ப் படுத்திக் கொண்டான்.
உலகில் உணவுகள் ஆங்காங்கே கிடைக்கும் விளைப் பொருட்கள் மற்றும் இயற்கை உணவுகளைக் கொண்டே உணவு சமைக்கும் முறைகளை கற்றுக் கொண்டனர்கள். உணவை அவித்து வேக வைத்தல், தாளித்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வாட்டுதல், வற்றலாக்குதல், எண்ணெய்யில் பொரித்தல், வேக வைத்தல் போன்ற பல்வேறு வகையான முறைகளில் சமைத்து உண்டனர்.
உணவை எப்படி உற்பத்தி செய்வது என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டறிந்துவிட்ட பின், உணவைப் பதப்படுத்துதல் கண்டறிதல் நாகரிக வளர்ச்சியின் எளிய முன்னேற்றம் மட்டும்தான் என்று நாம் நினைக்கலாம். ஆனால், போர்களால் சூழப்பட்டிருந்த 18-ம் நூற்றாண்டில் பதப்படுத்தப்பட்ட உணவை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று இராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியதற்கு காரணம் இருக்கிறது. எதிரிகளை விட, உணவே பல தோல்விகளை வரவழைத்திருக்கிறது.
இன்றைக்கும் குளிர்பதனம் இல்லமால் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றல் என்பது இயற்கை, மனிதப் பேரழிவின்போது மனிதர்கள் தாக்குப்பிடித்து உயிர் வாழ உதவுகிறது. ஏனென்றால், அந்த நேரத்தில் மின்சார வினியோகமும் இருக்காது, புதிய உணவுப் பொருட்களும் கிடைக்காது. 18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தகர குவளையில் உணவை அடைத்து பதப்படுத்தும் முறை கண்டறியப்பட்டது.
மாவீரன் நெப்போலியனின் இராணுவத்தினர் போரில் சண்டையிட்டு இறந்ததை விட, பசி, ஊட்டச்சத்து குறைப்பட்டால்தான் அதிக அளவில் இறந்தனர். வைட்டமின் சி குறைப்பட்டால் ஸ்கர்வி என்னும் நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டனர். புண்கள் ஏற்படுதல், மஞ்சள் காமாலை, காய்ச்சல், நரம்புக் கோளாறு, இறப்பு போன்றவற்றை அது ஏற்படுத்தக்கூடும்.
அப்போது பிரெஞ்சு (French) அரசாங்கம், இராணுவ வீரர்களுக்காக உணவை பதப்படுத்தும் முறையை கண்டறிபவர்களுக்கு 12,000 பிராங்க் பரிசாக அளிப்பதாக அறிவித்தது. நிகோலஸ் அப்பெர்ட் என்பவர், பாதி சமைக்கப்பட்ட உணவை இதற்கு தீர்வாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். மிட்டாய் செய்பவர், சமையல் கலை வல்லுநர், பீர் தயாரிப்பவர் என பல்வேறு அனுபவங்களை பெற்றிருந்தார்.
உணவை பாட்டில்களில் சேமித்து, அவற்றை கார்க்கால் அடைத்து, அவற்றின் உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்ற கொதிக்கும் தண்ணீரில் போட்டார். ஏனென்றால் காற்றுதான் உணவைக் கெட்டு போகச் செய்கிறது என்று அவர் நம்பினார். பிரெஞ்சு இராணுவ வீரர்கள் வெளிநாட்டுக்கு சென்ற போது, அப்பெர்ட் பதப்படுத்திய கோழி, காய்கறி, குழம்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்கு பிறகும் கூட சாப்பிடக் கூடியதாக அவை இருந்தன என்று தெரிவித்தனர்.
உணவைப் பதப்படுத்தும் செயல்பாடு, இராணுவ தேவைகளுக்காகவே முதலில் கண்டறியப்பட்டது. ஆனால், கொதிக்கும் தண்ணீரில் உள்ள வெப்ப காற்றை நீக்குவதற்கு பதிலாக, நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது என்பதை அரை நூற்றாண்டுக்குப் பிறகே லூயி பாய்சர் கண்டுபிடித்தார். நுண்ணுயிரிகளே உணவைக் கெட்டு போக வைத்தன, நோய்களை உருவாக்குகின்றன என்று அவர் கண்டுபிடித்தார்.
உணவைப் பதப்படுத்துவது என்பது பாக்டீரியா (கண்ணுக்குத் தெரியாத ஒரு வகை நுண்ணுயிரி ஆகும்), பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுப்பதுதான். அத்துடன் கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதால் உணவு சிக்குப் பிடித்து போவதை தடுக்கும் செயல் ஆகும். உணவுப் பதப்படுத்தும் நுட்பம் மூலம் சுவையான பல புதிய உணவுப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. தயிர், சீஸ் போன்றவை எடுத்துக்காட்டுகள் ஆகும்.
1810-ல் ஆங்கிலேயரான பீட்டர் தூரந்த் மேம்படுத்தப்பட்ட உணவுக் கலத்துக்கான காப்புரிமையை பெற்றார். பாட்டில் உணவு கலனின் மூடியாக இருந்த கார்க்குக்கு பதிலாக, பற்ற வைக்கப்பட்ட உறுதியான உலோக மூடியை அவர் கண்டறிந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே நாட்டைச் சேர்ந்த பிரியன் டான்கின், ஜான் ஹால் ஆகிய இருவரும் பாட்டில்களுக்குப் பதிலாக உலோகக் கலன்களில் உணவை அடைத்து விற்கும் தொழிற்சாலையை தொடங்கினர். இவ்வாறாக உணவு பதப்படுத்தும் முறை வளர்ச்சியை பெற்றது.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.