தாழ்வு மனப்பான்மை நீங்க நடிகர் சூர்யாவின் நிஜ வாழ்க்கை பதிவு
நடிகர் சூர்யா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தாழ்வு மனப்பான்மையும் மற்றும் கூச்ச சுபாவமும் கொண்ட அவர், இன்று தன்னை மாற்றிக்கொண்டு வெற்றிப் படிக்கட்டின் உச்சியில் ஏறி நிற்கிறார். அவரது வளர்ச்சியைப் பற்றி அவரே சொல்ல கேட்கலாம். ‘ஒரு போட்டோவுக்காவது சிரியேண்டா’ என்று, கேமராவை கையில் எடுக்கும் ஒவ்வொரு முறையும் என் அப்பா (நடிகர் சிவக்குமார்) கூறுவார்.
நாலு பேருக்கு இடையே இருந்தால், ஏதோ தாழ்வு மனப்பான்மையோடு தான் இருப்பேன். எதாவது பேச வேண்டும் என்றால், வார்த்தைகளுக்காக தடுமாறுவேன். இந்த நிலையில் தான், இயக்குனர் வசந்த் என்னை கதாநாயகனாக (ஹீரோவாக) வைத்து படம் செய்ய ஆசைப்பட்டு, அப்பாவிடம் கேட்டார். அதற்கு அப்பா “அவனுக்கு நடிப்பில் சுத்தமாக ஈடுபாடு இல்லை” என்று சொல்லிவிட்டார். என்னிடம் வந்து கேட்டபோது, நானும் அதையேத்தான் சொன்னேன்.
கார்மெண்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த நான், அதே தொழிலை சொந்தமாக செய்ய நினைத்தேன். கடன் பெற்று தொழில் தொடங்கினேன். தொழில் நன்றாகத் தான் நடந்தது என்றாலும், அந்தத் துறையில் நாளடைவில் எனக்கு ஆர்வம் இல்லாமல் போனது. அதனால் அந்த நிறுவனத்தை மூடிவிட்டேன். ரூ.25 ஆயிரம் கடன் ஏற்பட்டது தான் மிச்சம். அந்தக் கடனை அடைக்க, சினிமா ஒன்று தான் வழி என்று எனக்குத் தோன்றியது.
ஒரு காலத்தில் என்னை அணுகிய இயக்குனர் வசந்தை தொடர்பு கொண்டேன். அவர், போட்டோக்கள் எடுத்துக்கொண்டு மறுபடியும் பார்க்கலாம் என்று கூறி அனுப்பி வைத்தார். சில நாட்களிலேயே என்னை அழைத்து, "மணிரத்னம் தயாரிப்பில் ஒரு படம் செய்யப் போகிறேன். அதில் விஜய்யுடன் நடிக்க வேண்டும்” என்றார். இதுபற்றி அப்பாவிடம் கூறினேன். அவர், அந்தத் துறையில் எத்தகைய துன்பங்கள் இருக்கும் என்பதை விவரித்து "வேண்டாம்” என்று கூறிவிட்டார்.
நான் அப்பா சொன்னதை பொருட்படுத்தாமல் ‘நேருக்கு நேர்' என்னும் அந்தப் படத்தில் நடித்தேன். டைரக்டர் மணிரத்னம் தான் ‘சரவணன்’ என்ற எனது பெயரை 'சூர்யா' என்று மாற்றினார். நடிப்பில் நான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக் கொண்டேன். சினிமாவில் நல்ல பிரேக் கிடைப்பதற்காக காத்திருந்தேன். ஒரு நாள் இயக்குநர் பாலா எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ‘சேது’ படத்தில் அப்பா நடித்தார். அதற்கான போட்டோ சூட்டுக்காக அவர் வந்தார். அப்போது நானும், நடிகை ஜோதிகாவும் நடித்த ஒரு படம் பற்றி பேசினார்.
அதில், 'நடிகை ஜோதிகாவின் நடிப்பு மிக நன்றாக இருந்தது' என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார். அதன் அர்த்தம், 'உன் நடிப்பு நன்றாக இல்லை' என்பது தானே!. டைரக்டர் பாலா இயக்கிய ‘சேது' படமும், அதில் நடித்த நடிகர் ‘சியான்’ விக்ரம் ஒரே படத்தில் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றதும் என்னை தூங்க விடாமல் செய்தது. ஒரு நாள் டைரக்டர் பாலாவை சந்தித்து, “உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஹீரோவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சின்ன கதாபாத்திரம் கொடுத்தால் போதும்” என்று கெஞ்சினேன். அந்த நேரத்தில் அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
அதற்கு அடுத்த வாரமே நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் நடிகர் அஜித் கூட்டணியில் ஒரு படம் எடுக்கப் போவதாக டைரக்டர் பாலா அறிவித்தார். அதன்பிறகு ஒரு மாதம் கழித்து என்னை அழைத்த டைரக்டர் பாலா, “அஜித்துடன் எனக்கு செட் ஆகவில்லை. அந்த கதாபாத்திரத்தை நீ செய்கிறாயா?” என்று கேட்டார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. டைரக்டர் பாலா சொன்னபடி நடித்த 'நந்தா' என்ற அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு காலத்தில் என்னை திட்டியவர்களே, 'சூர்யாவுக்குள் இவ்வளவு பெரிய நடிகர் ஒளிந்திருக்கிறாரர்?' என்று பாராட்டினர்.
தமிழக அரசிடம் இருந்து அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது பெற்றேன். டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் 'காக்க… காக்க...படத்துக்கான கதையோடு என்னிடம் வந்தார். அந்தப் படத்துக்காக போலீஸ்காரர்களுடன் நாள் கணக்கில் பழகினேன். அவர்களின் சுறுசுறுப்பு, கம்பிரத்தை எனக்குள் காட்டுவதற்கு முயற்சித்தேன். நானும் ஜோதிகாவும் இணைந்த படத்தில் முதல் பிளாக்பஸ்டர் படமாக அது அமைந்தது. தெலுங்கிலும் கூட என்னை ஸ்டார் ஆக்கிய படம் அது.
கிளாஸ் மட்டுமல்ல மாஸ் படங்களாக இருந்தாலும், ரிச்சாக இருக்க வேண்டும் என்பதால் 'சிங்கம்’ சீரிஸ் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். 'சிங்கம் பட அனைவரையும் கவர்ந்தது. எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு கட்டத்தில் சிறு தடுமாற்றம் உண்டாகும். அப்படி ஒரு நிலை 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் இருந்தது. அதில் இருந்து வெளியே வருவதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருந்தபோது தான், 'கேப்டன் கோபிநாத் சுயசரிதத்தை சினிமாவாக எடுக்கிறேன்' என சுதா கொங்கரா வந்தார். 'எப்படி வருமோ?' என்று சந்தேகத்தோடு பின்வாங்கிய என்னை, என் மனைவி ஜோதிகா பிடிவாதமாக ஒப்புக்கொள்ளச் செய்தார்.
எனக்குள் இருந்து நடிப்பை வரவழைப்பதில், சுதா எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை. இந்தப் படத்தில் நான் 17 வயது இளைஞனாக காட்சியளிக்க வேண்டும். அதை கிராபிக்ஸ் செய்யலாம் என்றதற்கு சுதா ஒத்துக்கொள்ளவில்லை. அந்த காட்சிக்காக எடையை குறைக்க வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். எனக்கும் வேறு வழியில்லை. 30 நாட்களில் 10 கிலோ எடை குறைத்து அந்தக் காட்சியில் நடித்தேன்.
‘சூரரைப் போன்று’ படத்திற்காக தயாரிப்பாளராகவும், நடிகனாகவும் நான் பெற்ற இரண்டு தேசிய விருதுகளும் சுதா கொங்கராவுக்குள் உள்ள அர்ப்பணிப்பு உணர்வுக்கே சொந்தம்!.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.