Information For Entrepreneurs In Tamil | தொழில் முனைவோர்க்கான தகவல்கள்

தொழில் முனைவோர்க்கான தகவல்கள்

எந்த ஒரு தொழிலையும் யாரும் ஈசியாக தொடங்க முடியும். ஆனால் அதில் சாதனை படைப்பவர்கள் வெகு சிலரே. தொழில் முனைவோர் வெற்றியாளராக பல முக்கிய குணநலன்களைப் பெற்றிருத்தல் அவசியம். தாங்கள் ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெறச் செய்யும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் மனதின் அடிதளத்தில் எப்போதும் இருக்க வேண்டும்.
சிறு தொழிலைத் தொடங்கி நடத்தும்போது தங்களுக்கன்று பொருள் ஈட்டுவதுடன் வேறு பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுத்து உதவ வேண்டும். இது தவிர தொழில்மூலம் இயற்கையின் வளங்களை நுகர்வோர்க்கு வாழ்க்கை வசதிகளாக மாற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பையும் ஏற்கின்றனர். சிறு தொழிலில் ஈடுபட விரும்புவோர் மற்றவர்களை விடச் சிறப்பான கீழ்கண்ட குணநன்களைப் பெற்றிருத்தல் அவசியம்.

தணியாத தாகம்

எந்த ஒரு தொழிலைத் தொடங்கினாலும் அதை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்ற தணியாத தாகம் எப்போதும் வேண்டும்.

சிரித்த முகம்

நகல்வல்லர் அல்லரார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்(று) இருள்.
(திருக்குறள் 999)
அதாவது, மற்றவரோடு கலந்து பேசி பழகி மகிழ முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகம், ஒளியுள்ள பகல் நேரத்திலும் இருளில் இருப்பது போன்றதாகும் என்கிறார் அய்யன் வள்ளுவர். எல்லாத் தொழிலிலும் பொது மக்களுடன் நெருங்கிப் பழகும் சூழல் உண்டாகும். ஆகவே, தொழில் முனைவோராக இருக்க விரும்பும் நபர்கள் பொது மக்களிடம் சிரித்துப் பழகுகின்ற பழக்கத்தையும், குணத்தையும் அவசியம் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பாக ஏற்கனவே தொழில் ஈடுபட்டு உள்ளவர்களுடன் விரும்பிப் பழகுதல் வேண்டும்.
தொழில் முனைவோராக வளர்வதற்கு தேவையான பண்புகள், ThaenMittai Stories

மனம் தளராத உறுதி

முன் வைத்த கால் பின் வைக்காதே என்பதை மனதில் கொள்ள வேண்டும். தொழிலின் தொடக்க காலத்தில் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும். அச்சமயங்களில் மனம் தளராத உறுதி கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கை அவசியம்

தொடங்கும் தொழில் வெற்றி அளிக்கும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை. மனம் உண்டானால் வழி உண்டாகும் / மனமிருந்தால் மார்க்கம் உண்டாகும் போன்ற பழமொழிகளை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

தொழிலில் வெற்றியும் தோல்வியும் இயற்கை. தோல்வியைக்கண்டு துவளாத மனம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும். இது தொழில் துறையின் வெற்றிக்குத் தேவையான ஒன்று ஆகும்.

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

தங்கள் செய்யும் தொழில் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு கையாள்வது அல்லது சமாளிப்பது போன்றவற்றை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தொலைநோக்கு பார்வை வேண்டும்

தாங்கள் செய்யும் தொழிலின் எதிர்கால வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றிய தொலைநோக்குப் பார்வை அவசியம் வேண்டும். அதற்கேற்றார் போல செயல்பட வேண்டும்.

தலைமைப் பண்பு

எந்தத் தொழில் அமைப்பானாலும் அதன் தலைமை நிர்வாக, முக்கியமானவர். நமக்கு பொருள் விற்பவர்கள் ஆகிய பலர் கூட்டாக ஈடுபடுகின்றனர். அவர்களை தலைமை தாங்கி வழி நடத்திச் செல்கின்ற அறிவு திறன் வேண்டும். ரெயில் வண்டியின் வேகம் என்பது அதன் இன்ஜினின் வேகத்தைப் பொறுத்தது என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு செயல்பட வேண்டும்.

காரியத்தில் கண்

தொழில் தொடங்கி நடத்தும் போது சிறு தொழிலாகப் பதிவு செய்தல், பஞ்சாயத்து, நகராட்சி போன்றவற்றின் அனுமதி பெறுதல், வங்கி கடன் பெறுதல், மின் இணைப்புப் பெறுதல், விற்பனை வரி பதிவு செய்தல், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறுதல் போன்ற பல அரசு அனுமதிகளைப் பெற, வேண்டியவற்றை தாமதமின்றிச் செய்ய வேண்டும். இம்முயற்சியில் நேரங்களில் சத்திய சோதனை வரும். வரும் போது நேர்மைக்காகப் போராட வேண்டும் என்பதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுக் காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.

பொறுப்பேற்றல்

தொழில் நடத்தும்போது பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். தரமான பொருள்களைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்தல், ஊழியருக்கு நியாயமான ஊதியம் வழங்குதல், அரசு விதிகளை நிறைவேற்றுதல், வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்துதல், வரி செலுத்துதல் போன்ற பல பொறுப்புகளை விரும்பி நிறைவேற்ற வேண்டும்.

உழைப்பு

தொழில் முனைவோர் கால நேரம் பாராது கடினமாக உழைக்க வேண்டும். காரியம் கைகூடும் வரை மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் தஞ்சாது உழைக்க வேண்டும்.

முடிவெடுத்தல்

தொழில் உலகம் கடல் போல் பரந்துபட்ட ஒன்று. இதில் நாள்தோறும், கணந்தோறும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. சிறந்த முடிவுகளை தேவையான நபர்களுடன் மற்றும் அது தொடர்பான அனுபவம் (Experience) மிக்கவர்களுடன் அல்லது நாமே முடிவுகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும். தாமதம் செய்யும் போது மற்றவர்கள் நம்மை முந்திவிட வாய்ப்பு உண்டு.

நன்மதிப்பு

தொழிலில் வெற்றிபெற நன்மதிப்பு (Goodwill) பெரிதும் உதவுகிறது. நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்தல், கல்வி மருத்துவ நிறுவனங்கள் நடத்துதல், ஆக்கப்பணிகளுக்குத் துணை நிற்றல், எளிமையாக, நேர்மையாக வாழ்தல்,போன்றவற்றால் இந்த நன்மதிப்பைப் பெற முடியும்.

கவனம் தேவை

எடுத்த தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். வெற்றி பெறும் வரை வேறு எந்த திசையிலும் அல்லது தவறான பாதைகளில் கவனம் செலுத்தக் கூடாது. வெற்றியினால் கர்வமும், திசை திருப்பமும் புகாவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் ஒரே தொழிலில் கவனம் கொள்வது வெற்றிக்கு வழி வகுக்கும் செயலாக அமையும்.

ஒரு தொழிலை சிறப்பாக செய்து முடிப்பதற்கு தொழில் முனைவோர் அடிப்படையாக பெற்றிருக்க வேண்டிய முக்கியமான குணாதிசியங்களை தொழில் முனைவோரின் சீரிய பண்புகள் என்று அழைக்கப்படுகின்றது. புதிதாக தொழில் முனைய விழைவோர் அனைத்து குணநலன்களையும் கொண்டவராக இருக்கமாட்டார். அவரிடம் இல்லாத குணநலன்களை படிப்படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தொழில் முனைவோர்க்கான தகவல்கள், ThaenMittai Stories

தொழில்முனைவோர் பெற்றிருக்கவேண்டிய சீரிய பண்புகள்

தன்னம்பிக்கை

தன் மீதும் தன்னுடைய திறமை மீதும் முழு நம்பிக்கை வைத்தல் வேண்டும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக முடிக்க / சந்திக்க தன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருத்தல் வேண்டும். எத்தகைய எதிர்ப்பு இருந்தாலும் தனது முடிவில் உறுதியாக இருத்தல் வேண்டும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் கடினமான செயலை கூட செய்ய தயாராக இருத்தல் வேண்டும்.

புதிய சிந்தனை, சுய செயல்பாடு

எந்த ஒரு செயலையும் முடிக்க சாதாரணமாக தேவைப்படுவதை விட கூடுதல் முயற்சி எடுத்தல் வேண்டும். மற்றவரோ அல்லது சூழ்நிலையாலோ நடப்பதற்கு முன்பே காரியத்தில் இறங்குதல் வேண்டும். தொழிலை புதிய இடங்களில் புதிய பொருள்கள் மற்றும் புதிய சேவை மூலமாக விரிவாக்க செய்தல் வேண்டும்.

தகவல் சேகரித்தல்

இலக்கை அடைய தேவையான தகவல்களை சுயமாக சேகரிக்க முற்படுவது வேண்டும். சுயமாக சந்தை ஆய்வு செய்தோ, வல்லுநர்களை கலந்தாலோசித்தோ, தெரிந்தவர்கள் மூலமாகவோ தொழிலுக்கு பயனுள்ள தகவல்களை முயன்று சேகரித்தல் வேண்டும்.

வாய்ப்புகளை உருவாக்குதல் - பயன்படுத்துதல்

வாய்ப்புகளுக்காக சூழ்நிலையை கவனித்தல் வேண்டும். கண்டறிந்த வாய்ப்புகளை உடனடியாக அதை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அசாதாரணமான வாய்ப்புகளையும் உருவாக்கி நம் தொழிலுக்குத் தேவையானவற்றை அடைய வேண்டும்.

முறையான திட்டமிடல்

இலக்கை அடைய சரியான படிப்படியான திட்டமிடல் பெரிய செயலை சிறிய சிறிய செயல்களாக மாற்றி எளிதில் முடிக்கும் திறமை வேண்டும். தடைகளை முன்னறிந்து திட்டமிடல் வேண்டும். சீரான மற்றும் முறையான செயல் ஆற்றல் வேண்டும்.

விடா முயற்சி

தடைகளை தாண்டி இலக்கை அடைய திரும்பத் திரும்ப செயல்புரிதல் வேண்டும். பெரிய தடை வரும் போதும் மனம் தளராமல் செயல்படுதல் வேண்டும். புதிய செயல்கள் மூலம் தடைகளை உடைத்தெறிய வேண்டும்.

பிறரை தன்வயப்படுத்துதல்

பிறரை தனது பொருளையோ அல்லது சேவையையோ வாங்க வைத்தல் வேண்டும். நிதி உதவியோ OR வேறு வகையான உதவியையோ தர சம்மதிக்க வைத்தல் வேண்டும். தனது தொழிலுக்கு சாதகமாக நடக்க வைத்தல் வேண்டும்.

செல்வாக்கு யுக்திகளை பயன்படுத்துதல்

பல விதமான யுக்திகளை பயன்படுத்தி பிறரை நமக்கு சாதகமாக நடக்க வைத்தல் வேண்டும். புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். செல்வாக்கு மிக்க நபர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரத்திற்கான முனைப்பு

தனது தொழிலில் தற்போது உள்ள தரத்தையோ அல்லது அதையும் விட மேம்பட்ட தரத்திலோ பொருளை அல்லது சேவையை தர முனைப்புடன் செயல்படுதல் வேண்டும். தனது பொருளையும் மற்ற போட்டியாளர்களின் பொருளையும் ஒப்பிட்டு தரத்தை மேம்படுத்த எப்போதும் முயலுதல் வேண்டும்.

செயலை முடிக்க முனைப்பு

எடுத்துக் கொண்ட செயலை சொந்த சுகங்களை தியாகம் செய்து எப்பாடுப் பட்டாவது முடிக்க அரும்பாடு பட வேண்டும். ஒரு செயலில் இறங்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு முழு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை ஆட்களோடு இணைந்து தோள் கொடுத்து நின்று செயலை முடித்தல் வேண்டும். வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும்.

செயல்திறன்

ஒரு செயலை முடிக்க வழி வகைகளை கண்டறிதல் வேண்டும். வேகமாகவோ, குறைந்த செலவிலோ, குறந்த பொருட்களோடோ, செயல்படுத்துதல் வேண்டும். செலவு குறித்து முழு விழிப்புணர்வு கொள்ளல் வேண்டும்.

பிரச்சனைகளுக்கு தீர்வு காணல்

தன் நிர்ணயித்த இலக்குகளை அடைய புதிய அசாதரணமான தீர்வுகளை கண்டறிதல் வேண்டும். தடை வரும் போது மாற்று தீர்வை செயல்படுத்துதல் வேண்டும். புதிய வழிமுறைகளை தொடர்ந்து கண்டறிய முனைதல் வேண்டும்.

வலியுறுத்தல்

கருத்து வேறுபாடுகளையும், பிரச்சனைகளையும் மற்றவர்களோடு தைரியமாக நேரடியாக எடுத்து வைத்தல் வேண்டும். மற்றவர்கள் செய்ய வேண்டிய பணிகளை எடுத்துரைத்து வேலை வாங்குதல் வேண்டும்.

கண்காணித்தல்

இலக்கை அடைய உருவாக்கிய திட்டப்படி செயல்கள் நடைபெறுகின்றதா என்று கண்டறிய வேண்டும். அதற்கான நடைமுறைகளை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் வேண்டும். தானே திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்பாடுகளையும் கண்காணித்தல் வேண்டும்.

ஊழியர் நலனில் அக்கறை

தொழிலாளிகளின் நலத்தை மேம்படுத்த செயல் பட வேண்டும். அவர்களுடைய சொந்த நலனிலும் அக்கறை கொள்ளுதல் வேண்டும்.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook